ஐ2யு2 குழுவின் முதல் உச்சி மாநாடு; இந்திய உணவுப் பூங்கா திட்டத்தில் முதலீடு.! அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆர்வம்

புதுடெல்லி: இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் வகையில் உணவு பூங்காக்கள், சூரிய சக்தி உற்பத்திக்கு அதிகளவு நிதி ஒதுக்க அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஐ2யு2 குழுவின் முதல் உச்சி மாநாடு காணொலி மூலம் நடந்தது. பிரதமர் மோடியுடன், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இஸ்ரேல் பிரதமர் யாயர் லாபிட் ஆகியோர் பங்கேற்றனர். தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வேளாண் உணவுப் பூங்காக்களில் முதலீடு செய்ய மேற்கண்ட நாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேளாண் உணவுப் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தில் 200  கோடி டாலர் (சுமார் ரூ.16,000 கோடி) முதலீடு செய்ய முடிவு  செய்யப்பட்டுள்ளது. உணவுப் பூங்கா திட்டம் தவிர, குஜராத்தில் சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வுக்காக அமெரிக்கா 33 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவுடன் இத்திட்டம் மேற்கொள்ளப்படும். 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிபொருள் உற்பத்தி என்ற இந்தியாவின் இலக்கில் முதலீடு செய்ய, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.