‘ஒன்றிய’த்துக்கு ஒரு நீதி; உள்ளாட்சிக்கு ஒரு நீதி; இதுதான் உங்கள் ‘நெஞ்சுக்கு நீதியா?’

‘’மத்தியில் ஆள்வது, மாநிலங்களை ஒன்றிணைத்த அரசு. எனவே அது ஒன்றிய அரசு. மாநிலங்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். ஒன்றிய அரசானது… பெரிய அண்ணன் மனோபாவத்துடன் நடந்து கொள்ளக்கூடாது. அதிகாரப்பரவல்தான், ஜனநாயகத்தின் அடிநாதம். மக்கள் கையில்தான் அதிகாரம் இருக்கவேண்டும்’’ இப்படியெல்லாம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேசிக் கொண்டிருக்கிறது தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு.

எதிர்கட்சித் தலைவராக ஸ்டாலின் நடத்திய கிராம சபை

ஆம், இது நூற்றுக்கு நூறு உண்மையே. அதிகாரம் மக்களின் கைகளில்தான் இருக்கவேண்டும். மத்தியில் ஆள்வதாலேயே, ஒன்றிய அரசானது மாநிலங்களைக் கைப்பாவைகளாகக் கருதக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளைத் தங்கள் கைப்பாவைகளாக மாநில அரசு கருதுவது மட்டும் எந்த வகையில் நியாயமாக இருக்கும். ஆம், தமிழக அரசானது ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள் தொடர்பான விஷயத்தில், பெரிய அண்ணன் மனோபாவத்தில் நடந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது.

கடந்த ஜூன் 24-ம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சிகள் தொடர்பான முக்கிய அரசாணையைச் சத்தமில்லாமல் வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. கிராம ஊராட்சிகளில் செயல்படும் கிராம சபையைப் போல, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை அமைத்து, செயல்படுத்துவது தொடர்பான அரசாணைதான் அது.

மக்களின் கிராம சபை

ஜனநாயகத்தில் மக்களின் நேரடி பங்கேற்பை உறுதி செய்யவேண்டும் என்ற முதன்மை நோக்கத்துடன்தான் 1992 -ம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் 73வது (ஊரக உள்ளாட்சிகள்) மற்றும் 74 வது (நகர்ப்புற உள்ளாட்சிகள்) அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 1996 முதல் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராம ஊராட்சிகளில் கிராம சபை என்பது நடைமுறையில் இருந்தாலும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

2006-ம் ஆண்டில் ஒன்றிய அரசு, ‘நகர ராஜ் மசோதா’வின் மாதிரியை வெளியிட்டு, அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை, வார்டு கமிட்டி போன்ற மக்கள் சபைகளை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். இதன் மூலம் மக்களின் நேரடி பங்கேற்பை உறுதிப்படுத்தவேண்டும் என மாநிலங்களை வலியுறுத்தியது.

இதை நிறைவேற்றவில்லை என்றால், ஒன்றிய அரசிடமிருந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு திட்ட நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதற்கு பயந்து, 2010-ல் தமிழக நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு. ஆனாலும் அவற்றுக்கான விதிகளை அறிவிக்காததால் இந்த மக்கள் சபைகள் காகிதத்திலேயே உறங்கிக் கொண்டிருந்தன.

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம்

இந்தச் சூழலில், மக்கள் அமைப்புகள் பலவும் 2019-ம் ஆண்டில் ஒரு கூட்டமைப்பாக இணைந்து, ‘சட்டம் இங்கே, சபை எங்கே?’ என்ற பிரசாரத்தை மக்களிடையே முன்னெடுத்தன. ‘உள்ளாட்சி அமைப்புகளில் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிக்கான விதிகளை அறிவித்து, மக்கள் சபைகளை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும்’ என்று அன்றைய அ.தி.மு.க அரசு தொடங்கி, இன்றைய தி.மு.க அரசு வரை இந்தக் கூட்டமைப்பு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. உள்ளாட்சி தேர்தலையே வருடக்கணக்கில் நடத்தாமல் சாக்குபோக்கு சொல்லி கிடப்பில் போட்டிருந்த அ.தி.மு.க அரசு , ‘வார்டு கமிட்டி’, ‘ஏரியா சபை’ அமைத்து மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதிலா அக்கறை காட்டும்?

இந்தப் பின்னணியில்தான் தற்போதைய தி.மு.க அரசானது ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சிகளின் வரலாற்றில் முக்கியமான ஒரு மைல் கல்லாக இருந்திருக்க வேண்டிய இந்த முயற்சி, வெறும் பெயரளவுக்கு நடந்திருப்பதுதான் சோகம்.

நகர்ப்புற மக்கள் தங்கள் பகுதியின் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், தேவையான வளர்ச்சித் திட்டங்கள்,‌ நிதிப் பயன்பாடு போன்ற விஷயங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரடியாக கலந்து ஆலோசிக்க, திட்டமிட, செயல்படுத்த, ஜனநாயக முறையில் உள்ளாட்சியில் தொடர்ந்து பங்கேற்க ஏற்படுத்தப்பட்ட சட்ட அங்கீகாரமுள்ள மக்கள் தளங்கள்தான் ஏரியா சபையும் மற்றும் வார்டு கமிட்டியும். ஆனால், தமிழக அரசு இப்போது வெளியிட்டு இருக்கும் அரசாணை, இத்தளங்களின் அதிகாரத்தையும் பணிகளையும் வெகுவாகச் சுருக்கியதோடு மட்டுமல்லாமல், உள்ளாட்சியில் அதிகாரப் பரவலை மக்கள் பங்கேற்பின் மூலம் உண்மையிலேயே சாத்தியப்படுத்தலாம் என்ற நம் அரசியலமைப்பின் நோக்கத்தையும் நீர்த்துப் போக செய்திருக்கிறது.

கோவில்பட்டி நகராட்சி அலுவலகம்

சமூகநீதி பேசும் தி.மு.க அரசு, வார்டு கமிட்டி உறுப்பினர் நியமனத்தில் இடஒதுக்கீடை மறுத்துள்ளது. உறுப்பினர்கள் நியமனத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லை. வார்டு‌ கமிட்டிகளுக்கான உறுப்பினர்களின்‌ எண்ணிக்கையும் மிகமிகக் குறைவாகவே வைத்துள்ளனர். அதாவது கைக்கு அடக்கமாக நிர்ணயித்துள்ளார்கள். கூட்டம்‌ நடத்துவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கையையும் திட்டமிட்டே மிகமிகக் குறைவாக நிர்ணயித்துள்ளார்கள். கமிட்டி கூட்டத்தைக் கூட்டுவதற்கான காலஇடைவெளியை அதிகமாக வைத்துள்ளனர். இதையெல்லாம்விட கொடுமை, ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி கூட்டங்கள் நடத்துவதற்கு உரிய விதிமுறைகளே உருவாக்கப்படாமல் இருப்பதுதான். ஆகமொத்தத்தில் மக்களின் உரிமைகள், பணிகள் மற்றும் அதிகாரங்களை குழிதோண்டி புதைக்கும் வேலையைத்தான் செய்திருக்கிறார்கள்.மக்களை எப்படியெல்லாம் ஒதுக்கி வைக்கலாமோ… அதற்கான அனைத்து வழிகளையும் உருவாக்கியுள்ளார்கள்.

நீர்த்துப்போக செய்திருக்கும் தி.மு.க அரசு!

சட்ட அங்கீகாரம் பெற்ற இந்த மக்கள் சபைகளை வெறும் மனுகொடுக்கும் தளங்களாகவே வைத்திருக்க விரும்பும் தமிழக அரசின் நோக்கம் இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகிறது! இப்படி நீர்த்துப்போன விதிகளுக்காகவா இத்தனை ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம்? அதுசரி, 2010 ல் இதே தி.மு.க ஆட்சியிலிருந்தபோது இயற்றிய சட்டமே (தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி திருத்தச்சட்டம்-2010) நீர்த்துப்போன சட்டம்தான். இப்போது அதை இன்னும் நீர்த்துப்போகச் செய்திருக்கிறார்கள். ‘எந்த வகையிலும் மக்களுக்கு அதிகாரம் அளித்து விடக்கூடாது’ என்கிற நோக்கத்துடனேயே வடிவமைப்பவர்களிடம் இருந்து வேறு எப்படி எதிர்பார்க்கமுடியும்?

மதுரையில் நடந்த முதல் கிராம சபை

மக்கள் இயக்கங்கள் பலவும் சேர்ந்து பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ள நல்ல பல நடைமுறைகளைப் பரிந்துரைகளாக முந்தைய அ.தி.மு.க அரசு மற்றும் தற்போதைய தி.மு.க அரசு இரண்டிடமும் வழங்கியுள்ளன. உண்மையாகவே மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் எண்ணம் இருந்திருந்தால், அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தி இருக்கலாம் அல்லது மக்கள் இயக்கங்கள் கேட்டுக்கொண்டபடி, வரைவு விதிகளை‌ பொதுவெளியில் வைத்து மக்கள் கருத்துக்களைக் கேட்டறிந்தபின் இந்த விதிகளை இறுதி செய்திருக்கலாம். இது எதையுமே செய்யவில்லை.

நகராட்சி

தனக்கு வந்தால் ரத்தம்… மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்கிற வகையில்தான் தற்போதைய தி.மு.க அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஆகக்கூடி, ‘குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிய கதை’யாக சட்டத்தையும் நடைமுறைப்படுத்தியாச்சு, மக்களுக்கு அதிகாரம் போகாமலும் பார்த்துக்கொண்டாச்சு!

பிறகென்ன… ஆயிரக்கணக்கான கோடிகள் புரளும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் கண்காணிப்பு இல்லாமல் ஊழலில் திளைக்கத்தான் செய்யும்!

-சாரு கோவிந்தன்

சாரு கோவிந்தன்

கட்டுரையாளர் சாரு கோவிந்தன், அடிப்படையில் ஒரு மென்பொறியாளர். உள்ளூர் மற்றும் உலகளாவிய அனுபவங்கள் கொண்டவர். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகள், மனதளவில் ஏற்படுத்திய ஆழமான கேள்விகள் மற்றும் காயங்கள் காரணமாக, சமூக அக்கறையுடன், மக்கள் இயக்கங்களுடன் இணைந்து ஒரு தன்னார்வலராக செயல்பட ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து, ஒத்தக் கருத்துடைவர்களுடன் இணைந்து கடந்த 2017-ம் ஆண்டு ‘மக்களின் குரல்‘ (Voice of people) என்கிற தன்னார்வ சமூக அமைப்பைத் தொடங்கி நடத்திவரும் இவர், மக்கள் நலன், மக்களுக்கான அதிகாரம், உள்ளாட்சி சீரமைப்பு உள்பட பொதுநலன் சார்ந்த விஷயங்களுக்காகத் தொடர்ந்து இயங்கிவருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.