தமிழக அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்படி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டவுடன், புதுச்சேரி அ.தி.மு.க-வின் மேற்கு மாநில செயலாளரும், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளருமான ஓம் சக்தி சேகரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக புதுச்சேரி அ.தி.மு.க-வின் கிழக்கு மாநில செயலாளரும், எடப்பாடியாரின் ஆதரவாளருமான அன்பழகனை கட்சியை விட்டு நீக்குவதாக இன்று அறிவித்திருக்கிறார் ஓ.பி.எஸ். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், “நான்கு ராஜ்யசபா உறுப்பினர்கள், 63 சட்டமன்ற உறுப்பினர்கள், 267 செயற்குழு உறுப்பினர்கள், 2,420 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கழகத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்ட ஓ.பி.எஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் பொதுக்குழுவில் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கிவிட்டனர்.
ஆனால் இன்று நான் உட்பட 44 பேரை கழகத்திலிருந்து நீக்கியதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். கழகத்தின் கொள்கை, கோட்பாடு சட்ட திட்டம் போன்றவை இவருக்கு ஏதாவது தெரியுமா? உச்ச நீதிமன்றம் வரை சென்று தோல்வியடைந்தவர் இவர். கழகத்தின் நடவடிக்கை குறித்து நீதிமன்றம் செல்பவர்கள், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என கழக நிறுவனர் புரட்சித் தலைவரால் கழக விதியில் எழுதப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடுப்பு வேலை செய்தவர் ஓ.பி.எஸ். தான் செய்த ஊழல்களில் இருந்து தப்பித்து கொள்வதற்காக கழக தொண்டர்கள் மீது பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
துரோகத்தின் ஒட்டுமொத்த உருவமாக ஓ.பி.எஸ் இருக்கிறார். புரட்சித் தலைவரால் கட்டப்பட்டு, அம்மாவால் கட்டிகாத்த தலைமை கழகத்தை பேட்டை ரௌடிபோல் செயல்பட்டு உடைத்துள்ளார். அப்போதே அவரை எங்கள் மனதில் இருந்து தூக்கி எறிந்துவிட்டோம். அதனால் எங்களை பற்றி பேசவோ, எழுதவோ எங்களை நீக்கவோ ஓ.பி.எஸ் அவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. ஒன்றரை கோடி கழக தொண்டர்களின் எண்ணம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக எதிர்கட்சி தலைவரான எடப்பாடியார் கழக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, பொதுக்குழுவின் மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் கூறுவது தான் இப்போது முடிவு. ஓ.பி.எஸ் ஒரு மண் சுவர்.
அவர் மழையில் கரைந்துவிட்டார். எந்த அடிப்படை அறிவும், திறமையும் இல்லாமல் இருப்பவர் ஓ.பி.எஸ். தி.மு.க-வை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அ.தி.மு.க-வை அழிக்கவோ. ஒடுக்கிவிடவோ முடியாது. தி.மு.க-வின் சதிச்செயல் ஓ.பி.எஸ் மூலம் நிறைவேற்றப்பட்டதால் தலைமைகழகம் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அ.தி.மு.க கழகத்திலுள்ள புள்ளுருவிகளை கண்டுபிடிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் நான்தான் உண்மையான அ.தி.மு.க என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் யாரும் உண்மையான அ.தி.மு.கவினர் கிடையாது. கட்சி எங்களிடம் தான் உள்ளது. ஓரிரு மாதங்களுக்குள் எல்லாம் சரியாகிவிடும். ஓம்சக்தி சேகரை எப்பொழுது தலைமை கழகம் கட்சியில் இருந்து நீக்கியதோ அதிலிருந்து அவரை பற்றி பேசவோ, விமர்சிக்கவோ மாட்டோம்” என்றார்.