புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சி அமைத்ததில் இருந்து, அங்கு வசித்து வந்த சீக்கியர்கள், இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவானது. இவர்களின் மீது அடிக்கடி மதவெறி தாக்குதல்கள் நடந்தன. கடந்த மாதம் 18ம் தேதி காபூலில் உள்ள சீக்கியவர்களின் புனித தலமான குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்கள், இந்தியர்கள் நாடு திரும்ப ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, ஆப்கனில் சிக்கி தவித்த 3 சிறுவர்கள் உட்பட 21 சீக்கியர்கள் நேற்று முன்தினம் டெல்லி வந்தனர். அவர்களில் ராஜிந்தர் சிங் (27) என்பவரும், அவரது மனைவியும் அடங்குவர். ராஜிந்தர் கூறுகையில், ‘‘2 மாதங்களாக குருத்வாராவின் நான்கு சுவர்களை தாண்டி நாங்கள் வெளியே செல்லவில்லை. காபூல் நகரம் கல்லறையாக மாறியது. மருத்துவமனைகளுக்கு செல்ல முடியவில்லை. எனது மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது எங்கள் குழந்தையை கருவிலேயே இழந்து விட்டோம்,” என்றார்.