அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் இன்று தொடங்கியது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இணைந்து கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த கண்காட்சி தொடர்ந்து மூன்று நாள்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை வரை) நடைபெற உள்ளது. மூன்று நாள்களும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை கண்காட்சி நடைபெறும்.
இதில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இஸ்ரேல், ஜப்பான், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் நாடுகளில் இருந்து வேளாண், பொறியியல் உற்பத்தியாளர்கள் பங்கேற்று பொருள்களை காட்சிப்படுத்தியுள்ளனர். மொத்தம் 497 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் ஹால் F-129இல் பசுமை விகடன் சிறப்பு அரங்கம் இடம்பெற்றுள்ளது. அங்கு விகடன் குழும இதழ்களின் அச்சு மற்றும் டிஜிட்டலுக்கான புதிய சந்தாக்களை பெறலாம். தவிர, விகடன் பிரசுர நூல்களும் கிடைக்கும்.
இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் உண்மையான விவசாயி. புதிய தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கு இந்த கண்காட்சி உதவும். தொழிலதிபர்கள் வேட்டி கட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். வேளாண்மை மதிக்கப்படுகிறது. முதல்வர் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் அறிவித்துள்ளார். உழவர்களுக்கு இந்த அரசாங்கத்தால் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
அந்த உணர்வுக்கு மெருகூட்டும் வகையில், இங்கு நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் பயனுள்ள கண்காட்சியாக இது அமைந்துள்ளது. வீட்டில் இருந்தே மோட்டார் பம்புகளை இயக்கும் விதமாக, நடப்பு ஆண்டில் 10,000 விவசாயிகளுக்கு கருவிகளுடன் ஆப் கொடுத்திருக்கிறோம்.
விவசாயிகளுக்கு எல்லாமே போராட்டம் தான். இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மக்களுக்கு வந்திருக்கிறது. இப்போதுவரை 1 லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற்ற பதிவு செய்துள்ளனர். இயற்கை விவசாயத்துக்கு மாற தொடர்ந்து மூன்றாண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்.
அவர்களுக்கு இலவசமாக இயற்கை உரம் உள்ளிட்டவை வழங்கப்படும். கடந்த 6 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு கொடுக்கப்பட உள்ளது” என்றார்.