கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. குந்தா, பில்லூர், சோலையாறு அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அப்பர்பவானி, காட்டு குப்பை, பார்சன்ஸ்வேலி, மரவக்கண்டி, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நீரோடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், குந்தா அணை மற்றும் பைக்காரா மின் வட்டத்துக்குட்பட்ட அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கெத்தை, பைக்காரா, பார்சன்ஸ்வேலி, மாயாறு ஆகிய அணைகளுக்கு விநாடிக்கு 250 கன அடி முதல் 300 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
குந்தா, பைக்காரா ஆகிய மின் வட்டத்தின் கீழ் 12 மின் நிலையம், 13 அணைகள் உள்ளன. நேற்று காலை நிலவரப்படி, அணைகளுக்கு விநாடிக்கு 300 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்மட்ட இருப்பும், மொத்த கொள்ளளவும்
மேல்பவானி – 185 (210 அடி) , போர்த்திமந்து – 115 (130), அவலாஞ்சி – 110 (171),எமரால்டு – 105.5 (184), முக்கூர்த்தி – 16.5 (18), பைக்காரா – 70 (100),சாண்டிநல்லா-40 (49), கிளன்மார்கன் – 30.5 (33), மாயாறு – 16.5 (17), பார்சன்ஸ்வேலி – 65 (77) ஆகிய அணைகளின்நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதில், குந்தா – 85.5 (89), கெத்தை -155.5 (156), பில்லூர் – 100 (100) அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. குந்தா அணை மொத்த கொள்ளளவை எட்டியதால், இரண்டு மதகுகளில் தலா 150 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பில்லூர் அணை நிரம்பியது
நீலகிரி மற்றும் கேரளா மலைக்காடுகளில் பெய்துவரும் தொடர் மழையால், கோவை மாவட்டம் பில்லூர் அணையிலும் நீர்மட்டம் உயர தொடங்கியது. மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் நேற்று காலை நீர்மட்டம் 97.5 அடியை கடந்து அணை நிரம்பியது. விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்ததால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக 12 ஆயிரம் கனஅடி நீரும் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. மதியம் நீர் வெளியேற்றம் 26 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பவானிஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பவானி ஆற்றின் கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு வருவாய்த்துறை, காவல் துறையினர் மூலம் நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும், கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் மேடான பகுதிகளுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.
பிஏபி அணைகள்
கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் சின்னக்கல்லாறு, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, வெள்ளமலை டனல், சோலையாறு பிர்லா நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து அதிகரித்ததால், சோலையாறு அணை நிரம்பியது. 165 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 163.42 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6866 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 6501 கன அடி தண்ணீர் வீதம் சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. மீதமுள்ள உபரிநீர் மேல்மதகுகள் வழியாக கேரளாவின் சோலையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 61.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6248 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 127 கனஅடியாகவும் இருந்தது. நேற்று ஒரு நாளில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. பிஏபி திட்ட அணைகளின் நீர் மட்டம் உயர்வது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி சோலையாறில் 149 மி.மீ., வால்பாறையில் 87 மி.மீ., மேல்நீராறில் 110 மி.மீ., கீழ் நீராறில் 99 மி.மீ. மழைப் பொழிவு இருந்தது