சேலம்: சமத்துவ தலைவரான பெரியார் பெயர் கொண்ட சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், முதுகலை தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி ? என கேள்வி கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் மாணவி ஒருவர் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்று கேட்கப்பட்ட கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முதுகலை வரலாறு மாணவர்களுக்கான 2-வது செமஸ்டர் தேர்விக்கான வினாத்தாளில், இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமத்துவதலைவர் பெரியார் பெயரை கொண்டுள்ள பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியிலான கேள்விகளை கேட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழகம் பாலியல் புகாரில் சிக்கி சின்னாப்பின்னப்படும் நிலையில், தற்போது சாதிய ரீதியிலான கேள்வி மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், வினாத்தாள்கள் வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தயாரிக்கப்படுவதாகவும் வினாத்தாள்களை சரிபார்த்தால் கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் சர்ச்சைக்குறிய வினாத்தாள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க பெரியர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், உரிய நேரத்தல் விசாரணை குழு அமைக்கப்படும் என்றவர், இந்த கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகங்கள் மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம், பெரியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மீது பாலியல் புகாரை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பலைக்கழக மாணவிகள் கொடுததனர். இது சர்ச்சையானது. அங்கு வரலாற்றுத் துறையில் 2ஆம் ஆண்டு படித்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவியிம், அதே துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்த கி.பிரேம்குமார் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், சாதிப்பெயரை கூறி திட்டி மிரட்டல் விடுத்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த உதவிப்பேராசிரியர் மீது பாலியல் தொந்தரவு அளித்தது; கொலை மிரட்டல் விடுத்தது; சாதிப் பெயரை சொல்லி திட்டியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், மேல்நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஆனால் இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் உதவிப்பேராசிரியர் பிரேம்குமாரை பணி இடைநீக்கம் செய்தது. இந்த விவகாரத்தில் துணைவேந்தருக்கும், சில பேராசிரியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த பாலியல் புகாருக்கு பின்னணியில், துணைவேந்தர் உள்ளிட்டப் பேராசிரியர்கள் உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சர்ச்சையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது சாதி ரீதியிலான வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டு மேலும் சர்ச்சை உருவாக்கப்பட்டு உள்ளது.