கஞ்சா புகைத்த கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் கஞ்சா விற்கும் கும்பல் சிக்கியது. காஞ்சா கும்பலிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, ஆட்டோ மற்றும் 15,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பழைய மகாபலிபுர சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே கானத்தூர் ஆய்வாளர் தன்ராஜ் கண்காணிப்பில் இருந்தபோது இரண்டு கல்லூரி மாணவர்கள் மறைவான இடத்தில் கஞ்சா புகைப்பதைக் கண்டு அவர்களை பிடித்து விசாரித்ததில், வடபழனியைச் சேர்ந்த மோகன் என்பவரின் ஜிபே அக்கவுண்டில் பணம் செலுத்தினால் கஞ்சா தருவார் எனக் கூறினர். இதனையடுத்து, கஞ்சா கும்பலை கூண்டோடு பிடித்த காவல்துறையினர் திட்டமிட்டனர்.
அதன்படி, கல்லூரி மாணவர்களை வைத்து அந்த எண்ணிற்கு 12 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியதை அடுத்து, போரூரில் வந்து கஞ்சா பெற்றுக்கொள்ள கூறியிருக்கிறார் அந்த நபர். அங்கு வைத்து அவரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடமிருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
போரூரில் சிக்கிய மோகனிடம் விசாரித்ததில் அம்பத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் என்பரை கைகாட்டியுள்ளார். பின்னர் மீண்டும் அதே ஐடியாவை கடைபிடித்தது காவல்துறை. கஞ்சா தருவதாகக் கூறி மோகன் மூலம் ஜிபேவில் பணம் செலுத்தி அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் சென்று செந்தில் மற்றும் அவருடன் வந்த திலீப்குமாரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்தும் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
செந்திலிடம் விசாரித்த போது பல தகவல்கள் வெளியே வந்தது. அம்பத்தூரை சேர்ந்த முரளியிடம் பணம் கொடுத்து அனுப்பினால் விசாகப்பட்டினம் அருகில் துளி என்ற ஊரில் இருந்து கஞ்சா வாங்கி ரயில் மூலம் சென்னை கொண்டுவந்து திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் ஒரு வீட்டை வாடகை எடுத்து அங்கு வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
அதனடிப்படையில் அங்கு சோதனைசெய்து மேலும் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மொத்தம் 12 கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ மற்றும் 15,000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்கள் மீது கானத்தூர் போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM