நடிகர் விஜய் வாங்கிய சொகுசு கார் சம்பந்தப்பட்ட வழக்கு மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்ததுடன் தீர்ப்பும் வழங்கி முடித்து வைக்கப்பட்டுள்ளது.
விதவிதமான கார்கள் சேகரிப்பதும், ஓட்டுவதும் நடிகர் விஜய்யின் வழக்கம். அவர் நடிக்க வந்த காலத்திலிருந்தே பலவிதமான கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார். இப்போது அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் வரை பல சொகுசு கார்கள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த 2005ல் அவர் அமெரிக்காவிலிருந்து பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5 என்ற காரை இறக்குமதி செய்திருந்தார். அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தத் தமிழக அரசு வணிகத்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு உரிமையுள்ளது என்று தெரிவிக்கப்பட்ட பின்னர், விஜய் தரப்பில் ரூ.7,98,075 வரியாகச் செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, முன்னர் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக ரூ.30,23,609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021-ம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி, நடிகர் விஜய்க்கு மீண்டும் வணிக வரித்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில்தான் விஜய் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டது தவறு என்றும் செல்லாது என்றும் 2 சதவிகிதம் அபராதம் விதிப்பதற்குப் பதிலாக 400 சதவிகிதம் வரை அபராதம் விதித்து இருப்பதாகவும் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு வணிக வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், விஜய் தொடுத்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்ப்பான வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் விவாதித்த பிறகு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அந்தத் தீர்ப்பில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி அவசியம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், விஜய் தரப்பு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் என்று எதுவும் விதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரிக்கு பின் நுழைவு வரியை முழுமையாகச் செலுத்தியிருக்கவில்லை என்றால் மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வணிக வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, நடிகர் விஜய் ரூ.30 லட்சம் அபராதம் செலுத்தத் தேவையில்லை என்று தீர்ப்பாகியிருக்கிறது.
இதைப் போலவே சொகுசு கார் நுழைவு வரி தொடர்பான மற்றொரு வழக்குக்கும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. “இறக்குமதி செய்த கார்களுக்கு நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும்” என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
“வெளிநாட்டு சொகுசு கார்களை இறக்குமதி செய்தால் அந்த கார்களுக்குக் கண்டிப்பாக நுழைவு வரி செலுத்த வேண்டும். வணிக வரித்துறையினருக்கு அதற்கான முழு உரிமையும் உண்டு” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.