புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கோவை துடியலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி சிறுமி திடீரென மாயமானார். மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன் பின்னர், சிறுமியின் தந்தை இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
காவல்துறையினரின் விசாரணையின் போது, சிறுமி பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆசையில் கரூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கும் அவரது தோழியின் தம்பிக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. மேலும், அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.