சென்னை: மத்திய வேளாண் துறையும், கர்நாடக வேளாண் துறையும் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான மாநில வேளாண் அமைச்சர்களின் 2 நாள் மாநாடு, பெங்களூருவில் நேற்று தொடங்கியது.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், மத்திய சுகாதாரம் மற்றும் உரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வேளாண் இணை அமைச்சர்கள் ஷோபா கரந்த்லாஜே, கைலாஷ் சவுத்ரி, அனைத்து மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள், துறை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி, வேளாண் இயக்குநர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசியஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்களுக்கு போதிய முன்னுரிமை அளித்து கூடுதல் நிதி வழங்க வேண்டும். கூடுதலாக ரசாயன உரங்களை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத் தார்.