பெருந்தலைவர், கர்ம வீரர், கல்விக் கண் திறந்தவர், கிங் மேக்கர், படிக்காத மேதை என பல்வேறு அடைமொழிகளால் புகழப்பட்டவர், காமராஜர். தன்னலம் கருதாமல், மக்களுக்காக கடைசி வரை வாழ்ந்து மடிந்தவர். மடிந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அனைவரது மனதிலும் நேர்மை என்றால் காமராஜர் என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து வருபவர். அவருக்கு இன்று பிறந்தநாள்.
படிக்காத மேதை
காமராஜர் விருதுநகரில் 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி பிறந்தார். இவர்தம் பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த காரணத்தினால் குடும்ப சூழ்நிலை காரணமாக மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்கிறார் காமராஜர். எனவே பள்ளிப் படிப்பு கனவு என்பது தொடங்கும் முன்பே அவருக்கு கருகிவிடுகிறது. அப்படிப்பட்ட படிக்காத மேதைதான் தமிழ்நாட்டின் கல்விக் கண்ணை திறந்து வைத்தார்.
கல்வியில் கொண்டுவந்த புரட்சி
காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக்கல்வி முறை ஒழிப்புதான். குலக்கல்வி முறையில், தத்தம் சமூகத்திற்கான குலத்தொழிலை மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும். திட்டத்தின்படி, குழந்தைகள் பாதி நாளை பள்ளியிலும் மீதி நாளை தந்தையின் பாரம்பரிய தொழிலையும் கற்க செலவழிக்க வேண்டும். அதாவது, கோயிலில் பணியாற்றுபவர் குழந்தை, கோயிலிலும் விவசாயக் கூலியின் குழந்தை வயல்காட்டிலும் முடி திருத்தும் தொழில் செய்யும் தொழிலாளியின் மகன், முடியை திருத்தவும் கற்றிருக்க வேண்டும். ஆனால் காமராஜர் முதலமைச்சரானதுமே இந்த குலக்கல்வி முறைக்கு முடிவு கட்டானார்.
ஒரு சாமானியன் வாழ்க்கையில் மேம்பட்ட நிலைக்கு செல்ல வேண்டுனாமல் அவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். அந்த அறியாமையை போக்குவது கல்வி.. அந்தக் கல்வியை கொடுப்பது பள்ளிக்கூடங்கள்.. எனவே தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பள்ளிகளை திறந்தார் காமராஜர். பள்ளிகளை திறந்தால் மட்டும்போதுமா? ஏழை எளிய மாணவர்கள் ஒருவயிறு சாப்பாட்டுக்கே இல்லாமல் தவிக்கும்போது எப்படி பள்ளிக்கு செல்வார்கள் என நினைத்த காமராஜர், ஏழை எளிய மாணவர்களை பள்ளிக்கு கொண்டுவர இலவசக் கல்வி திட்டத்தையும், மதிய உணவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.
இந்த மதிய உணவு திட்டம்தான் பின்நாட்களில் சத்துணவு திட்டமாக மாறியது. இதனால் இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது. தனக்கு கிடைக்காத கல்வி எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கல்வியில் அவர் கொண்டுவந்த ஏகப்பட்ட புரட்சியின் காரமாணவே இன்றும் கல்வித் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
விவசாய புரட்சி
ஒரு நாடு தன்னிலையில் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் விவசாயம் முக்கியம். அதேசமயம் விவசாயம் செழிக்க தண்ணீர் மிக மிக முக்கியம். ஆனால் ஒரு குடம் குடிநீருக்காக மக்கள் கிலோ மீட்டர் கணக்கில் நடந்துசென்று தண்ணீர் சுமக்கும் நிலையே அப்போது தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்தது. இதனை கருத்தில்கொண்டு முதலமைச்சராக இருந்தக காலத்தில் எண்ணற்ற அணைகளையும், நீர்ப்பாசன திட்டத்தை கொண்டுவந்தார் காமராஜர்.
இன்றும் தமிழ்நாட்டில் ஓரளவு நீர்வளம் சிறப்பாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அவர்கொண்டு வந்த அணைகளும், நீர்பாசனத்திட்டங்கள் என்றால் மிகையாகாது. கீழ் பவானி, அமராவதி அணை , மணிமுத்தாறு , ஆரணி அணை, வைகை அணை , கோமுகி அணை, சாத்தனூர் அணை, வீடூர் அணை, வாயாறு அணை, பேச்சிப்பாறை அணை, குந்தா அணை, பரம்பிக்குளம், திருமூர்த்தி, பாபநாசம், ஆழியாறு, சோலையாறு என பல அணைகளை கட்டிய பெருமைக்குரியவர் காமராஜர். ஆட்சி செய்த வெறும் 9 ஆண்டுகளிலேயே இத்தனை சாதனைகளையும் செய்து முடித்தார் காமராஜர். அவருக்கு பின்னும், முன்பும் முதலமைச்சரான எந்தவொரு தலைவரின் ஆட்சிக்காலத்திலும் இத்தனை அணைகள் கட்டப்படவில்லை.
தொழில்புரட்சி
வேளாண்மை எப்படி ஒரு நாட்டிற்கு முக்கியத்துவமோ அதேபோல தொழிற்துறையும் முன்னேற்றம் கண்டால்தான் சமமான வளர்ச்சி இருக்கும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார் காமராஜர். படித்த இளைஞர்களுக்காக ஏகப்பட்ட தொழிற்சாலைகளை உருவாக்கினார். பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF), நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை ஆகியவை அவர் அவர் காலத்தில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும் ஆகும்.
நேர்மையின் இலக்கணம்
பொதுவாழ்வில் எளிமையான, நேர்மையான வாழ்க்கை முறையை கடைபிடித்தவர் காமராஜர். ஏகப்பட்ட உதாரணங்களை அதற்கு சொல்லலாம். தமிழ்நாடு முழுக்க மக்களுக்காக சுற்றித்திரிந்தவர் ஒருமுறை தாயை பார்க்க வீடு சென்றார். அப்போது வீட்டில் குடிநீர் குழாய் இணைப்பு இருப்பதை கவனித்த காமராஜர், ‘இந்த இணைப்பு எப்படி வந்தது? நான் அதற்காக பணம் ஏதும் தரவில்லையே?’ என தாயை பார்த்து கேட்டார். பக்கத்தில் இருந்த அதிகாரிகளோ, அம்மா வயசானவங்க.. ரொம்ப கஷ்டப்படுறாங்க.. அதனால் நாங்கள்தான் குடிநீர் குழாய் இணைப்பை கொடுத்தோம் என்றிருக்கின்றனர். ‘ஊரில் எத்தனை வயசான பெண்கள் கால்கடுக்க வலியுடன் தண்ணீர் பிடிக்க காத்திருக்கின்றனர்.. எப்படி இங்கே மட்டும் விதிகளை மீறி குடிநீர் இணைப்பு கொடுக்கலாம்’ என அதிகாரிகளை கண்டித்து உடனடியாக இணைப்பை துண்டிக்க செய்தவர் காமராஜர். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார்.
1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. உடுத்தும் அளவிற்கு சில வேஷ்டிகள் மட்டும் வைத்திருந்தார். தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார் என்று சொல்லும்போது அவர் எவ்வளவு நேர்மையாக வாழ்ந்திருப்பார் என்பது தெரியும். அதன்பின் வந்த தலைவர்கள் யாரும் தொடமுடியாத அளவிற்கு மகத்தான ஆட்சியை கொடுத்துவிட்டு சென்றதால், காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பொற்காலமாக திகழ்ந்து என்பதில் துளியளவும் மாற்றுக் கருத்தில்லை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM