தமிழ் சினிமாவின் துணை நடிகர்களுக்கு சம்பள உயர்வு – எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன?

தமிழ் சினிமாவின் துணை நடிகர்களுக்கான சம்பள உயர்வு குறித்த கூட்டம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் சங்கம் முன்னிலையில் நடந்திருக்கிறது.

பெப்சி தொழிலாளர்களின் சம்பளம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படுவது வழக்கம். ஆனால், சில காரணங்களால் கடந்த ஏழு ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து தொழிலாளர் சம்மேளனத்துடன் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தையை கடந்த மார்ச் மாதத்தில் நடத்தியது. அதன்படி தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான விதிமுறைகளையும் பொதுவிதிகளையும் சம்பள உயர்வையும் பேசி முடிவு செய்தனர். அந்த ஒப்பந்தம் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டு அமைப்பிற்கும் செல்லும் என ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார்.

ஆர்.கே.செல்வமணி மற்றும் சங்கத்தினர்

இந்நிலையில் இப்போது துணை நடிகர்களின் சம்பள உயர்வும் இப்போது பேசி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இடையே துணை நடிகர்கள் சம்பள உயர்வு உட்பட இரு தரப்பிலும் நிலவிவரும் பல்வேறு பிரச்னைகள் பற்றி இரு தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி, தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் எஸ்.கதிரேசன், தயாரிப்பாளர் சங்க கௌரவச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்கச் செயற்குழு உறுப்பினர்களான ராஜேஷ், மனோபாலா, பிரகாஷ், தயாரிப்பாளர் சங்கச் செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதுகுறித்து நடிகர் சங்கச் செயற்குழு உறுப்பினரான மனோபாலாவிடம் பேசினேன்.

மனோபாலா

“துணை நடிகர்கள் ஏஜெண்ட்கள் கேட்டுக்கொண்ட சம்பளம், பேட்டா இரண்டையும் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. துணை நடிகர்கள் சம்பளமாக, பேட்டா சேர்க்காமல் நாள் ஒன்றுக்கு ரூ.750 கொடுக்கப்படுகிறது. சினிமாவில் காலேஜ் சீன்கள் மற்றும் ஆடம்பர கல்யாணக் காட்சி போன்ற கூட்டங்களில் வந்து செல்பவர்களை ‘ரிச் கேர்ள்ஸ்’ எனச் சொல்வார்கள். அவர்களையும் துணை நடிகர்களாகக் கருத வேண்டும் எனவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதைப்போல சினிமாவில் நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஐம்பது சதவிகிதம் பயன்படுத்தப்பட்டால், மீதி ஐம்பது சதவிகிதத்துக்குத் துணை நடிகர்களையும் பயன்படுத்த வேண்டும். இதை இரண்டு சங்கங்களும் ஏற்றுக்கொண்டன” என்றார் மனோபாலா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.