`தாழ்த்தப்பட்ட சாதி எது’-பெரியார் பல்கலை வினாத்தாளிலிருந்த கேள்விக்கு துணைவேந்தர் விளக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் பருவ தேர்வில் `தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது’ என்ற கேள்வியை கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த வினாத்தாள் வேறு பல்கலைக்கழக பேராசிரியர்களால் எடுக்கப்பட்டவை என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற கல்லூரிகள் ஆகியவற்றில் தற்போது இரண்டாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பெரியார் பல்கலைக்கழக துறைகளில் சுமார் 2,500 மாணவர்களும், இணைவுபெற்ற கல்லூரிகளில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இதில், இளநிலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு இரண்டாம் செமஸ்டர் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
image
இதில், பெரியார் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு இரண்டாம் பருவ வரலாறு தேர்வு வினாத்தாளில் எழுப்பப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. வினாத்தாளில் 11-வது கேள்வியாக `மஹர், நாடார், ஈழவர், அரிஜன்’ ஆகிய சமூக பிரிவுகளை குறிப்பிட்டு, `இவற்றுள் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட இயக்கங்கள் 1880-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை என்கிற தலைப்பில் கேள்வி இடம் பெற்றுள்ளது. இது மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
image
`சாதி ஒழிப்பே மக்களின் விடுதலை’ என்று கூறி சாதி ஒழிப்பில் ஈடுபட்டவர் பெரியார். அவரது பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாட்டில் எது தாழ்த்தப்பட்ட சாதி என்கிற அடிப்படையில் சாதிகளை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியது அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே முன்பொருமுறை பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி ரீதியலான பாகுபாடுகள் நடப்பதாக எழுந்த புகார் குறித்து, தமிழ்நாடு சமூகநீதி கண்காணிப்பு குழு, அதன் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆய்வு செய்ய சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்க, தற்போது சாதி அடிப்படையில் கேள்வி கேட்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
image
சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ள துணைவேந்தர் ஜெகந்நாதன், `நேற்று நடந்த முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு தேர்வில் கேட்கப்பட்ட இக்கேள்வி குறித்து விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வினாத்தாள், பிற பல்கலைக்கழக கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயார் செய்யப்பட்டதாகும்’ என்றுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.