தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு 2ஆம் ஆண்டு மாணவர்களுக்குதேர்வு நடைபெற்றது. இதில் வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனிடையே இந்த கேள்வி தற்போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டன குரல்களை எழுப்பிவருகின்றனர். இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், வினாத்தாள்கள் வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தயாரிக்கப்படுவதாகவும் வினாத்தாள்களை சரிபார்த்தால் கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர், இந்த கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சாதியை ஒழிக்க வாழ்க்கையை அர்ப்பணித்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்த பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சாதி பற்றி கேட்ட கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
newstm.in