திருச்சி மேலகல்கண்டார்கோட்டை நாகம்மை வீதியைச் சேர்ந்தவர்வர் யமுனா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) (31). 7 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவருக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இவர் வசித்து வந்த அதேபகுதியில் தனியார் வங்கி ஊழியரான வினோத்குமார் (35) என்பவரும் வசித்து வந்தார். இவருக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கிறது. இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணும் அவரை விட்டு பிரிந்துச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது இந்நிலையில் ஒரே பகுதியில் வசித்து வந்த யமுனாவுக்கும் வினோத்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. 2 ஆண்டுகளாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததோடு, காதலித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று யமுனாவின் வீட்டிற்குச் சென்ற வினோத்குமார், கத்தியை எடுத்து அவர் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே யமுனா பரிதாபமாக பலியாகியிருக்கிறார். யமுனாவை கொலை செய்த பயத்தில் அங்கிருந்து ஓடிய வினோத், விவேகானந்தர் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துள்ளார். இதில் வினோத்குமாரின் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே அவரும் பலியானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் காமராஜ், இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் மாநகர துணை கமிஷனர் ஸ்ரீதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், வினோத் உடலையும், யமுனா உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யமுனா வீட்டிற்கு வினோத்குமார் வந்தபோது இருவருக்கும் இடையே கடுமையான தகராறு நடந்திருக்கிறது. அதன்பிறகே வினோத்குமார் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்கின்றனர் விஷயமறிந்த போலீஸார். மேலும், இந்த திருமணம் மீறிய உறவு விவகாரம் தனது குடும்பத்திற்கு தெரிந்து பிரச்னையானதால், அதன்பிறகு வினோத்குமாரை சந்திக்க யமுனா மறுத்ததாக சொல்லப்படுகிறது. இது கடும் கோபத்தை ஏற்படுத்தவே, ஒருவேளை வினோத்குமார் இந்த கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என நினைக்கின்றனர் போலீஸார். ஆனால் உண்மையிலேயே இருவருக்குமிடையே என்ன நடந்தது? எதற்காக வினோத் கொலை செய்தார்? இதன் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்கள்?…என போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.