கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் ஆண்கள் ஆடையகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆடையகத்தை குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜோசப் பவின்(39) என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையைப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார் ஜோசப் பவின். நேற்று காலையில் கடை திறக்கச் சென்றபோது, கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோசப் பவின் கடைக்குள் சென்று பார்த்தபோது, துணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்திருக்கின்றன. மேலும், துணிகள் திருடப்பட்டதும் தெரியவந்தது.
அதையடுத்து, தனது துணிக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக கோட்டார் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார் ஜோசப் பவின். போலீஸார் துணிக்கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆண்கள் ஆடையகத்தின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கல்லாவில் பணம் இல்லாததால் சுமார் இருபதாயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் விதமாக, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தனி நபர் என்பது தெரியவந்தது. கடைக்குள் நுழைந்து கல்லாவில் பணம் இல்லாததைப் பார்த்த கொள்ளையன், சுமார் 20 ஜோடி ஆடைகளைத் திருடியிருக்கிறான். பின்னர், கடையில் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஆண் உருவ பொம்மையின் ஆடைகளைக் கழற்றுவதும், அதனுடன் ஆபாசமாக நடந்துகொள்வதும் சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. அந்த காட்சியைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
கொள்ளையடித்த வீட்டில் சட்டியிலிருந்த மீன் குழம்பைச் சாப்பிட்டுச் சென்றது, குறட்டை விட்டுத் தூங்கியது, சமையல் செய்து நிதானமாக சாப்பிட்டுமுடித்துக் கொள்ளையடித்துச் சென்றது என கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வகையான கொள்ளையர்களை போலீஸார் பார்த்திருக்கின்றனர். ஆனால், துணிக்கடை பொம்மையுடன் கொள்ளையன் ஒருவன் செய்திருக்கும் செயல் போலீஸாரையே அதிர வைத்திருக்கிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் அந்தக் கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.