‛நாடகம் டூ சினிமா' : பிரதாப் போத்தனின் திரைப்பயணம்

பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) வயதுமூப்பு காரணமாக சென்னையில் காலமானார். நாடக நடிகராக அறிமுகமாகி சினிமாவில் ஹீரோ, வில்லன், இயக்கும் என பன்முகம் காட்டிய பிரதாப் போத்தன் சினிமாவில் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்க்கலாம்…

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952, ஏப்., 18ம் தேதி கொலத்திங்கல் போத்தன் (தந்தை) – பொன்னம்மா போத்தன் (தாய்) ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் பிரதாப் கே போத்தன். தனது பள்ளிப் படிப்பை ஊட்டியில் லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பயின்றார். அதன்பின் சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் தனது இளங்கலை வணிகவியல் படிப்பை படித்தார்.

பாலுமகேந்திராவால் அறிமுகம்
சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே ஆங்கில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். முதன் முதலில் “தகரா” என்ற மலையாளத் திரைப்படத்தில் தான் அறிமுகமானார். தமிழில் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் “அழியாத கோலங்கள்” படத்தை இயக்கியவர் பாலுமகேந்திரா. அதன் பின் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும், துணை கதாபாத்திரங்களும் ஏற்றும் நடித்தார். இவருடைய அண்ணன் ஹரி போத்தன் மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


யக்குனர் அவதாரம் – ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்
இயக்குனர் பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ள பிரதாப் போத்தன், “மீண்டும் ஒரு காதல் கதை” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரமும் எடுத்தார். தொடர்ந்து தமிழில் “ஜீவா”, “வெற்றிவிழா”, “மை டியர் மார்த்தாண்டன்”, “மகுடம்”, “ஆத்மா”, “சீவலப்பேரி பாண்டி”, “லக்கி மேன்” போன்ற படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளிவந்தன. இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதைகளங்களைக் கொண்டவைகளாக இருந்ததென்றே சொல்ல வேண்டும். அதேப்போல் ஒவ்வொரு படத்திலும் அந்தகாலத்திற்கு ஏற்ற பிரம்மாண்ட இருக்கும்.

ஜாம்பவான்களுடன் பிரதாப் போத்தன்
“யாத்ரா மொழி” என்ற மலையாளத் திரைப்படத்தில் சிவாஜி கணேசனையும், மோகன் லாலையும் நடிக்க வைத்து புகழ் தேடிக் கொண்டார். கே.பாலசந்தர், மகேந்திரன், பரதன், பாலுமகேந்திரா, மணிரத்னம், விசு, மணிவண்ணன், சிங்கீதம் சீனிவாசராவ், 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி போன்ற ஜாம்பவான் இயக்குநர்களிடம் ஒரு நடிகராக பணிபுரிந்த இவர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், மோகன்லால், சத்யராஜ், பிரபு, கார்த்திக், நெப்போலியன், திலகன் என அனைத்து பெரிய நடிகர்களுடனும் ஒரு இயக்குநராக பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு.

வில்லன் வேடத்திலும், குணசித்திர வேடத்திலுமே நடித்து வந்த நடிகர் நெப்போலியனை “சீவலப்பேரி பாண்டி” திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்த்தியவர் இவர். இவர் மலையாளத்திலும் சில படங்கள் இயக்கியிருக்கிறார் என்பதோடு நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் தனது இயக்கத்தில் நடிக்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.

100 படங்கள்
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏறக்குறைய 100 படங்கள் வரை நடித்திருக்கிறார். ‛‛அழியாத கோலங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, இளமைக் கோலம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள், சொல்லாதே யாரும் கேட்டால், நெஞ்சில் ஒரு முள், வா இந்த பக்கம், பனிமலர், வாழ்வே மாயம், அம்மா, எச்சில் இரவுகள், ஒரு வாரிசு உருவாகிறது, சட்டம் சிரிக்கின்றது, நன்றி மீண்டும் வருக, புதுமைப் பெண், மீண்டும் ஒரு காதல் கதை, சிந்து பைரவி, மனைவி ரெடி, ஜல்லிக்கட்டு, பேசும் படம், என் ஜீவன் பாடுது, பெண்மணி அவள் கண்மணி, ரத்ததானம், சிறையில் சில ராகங்கள், அமரன், தேடினேன் வந்தது, பிரியசகி, ராம், படிக்காதவன், சர்வம், ஆயிரத்தில் ஒருவன், அலெக்ஸ் பாண்டியன், பூஜை, ரெமோ'' ஆகியவை இவரது நடிப்பில் வெளிவந்த முக்கிய படங்களாகும்.

12 படங்கள் இயக்கம்
நடிகராக மட்டுமல்லாது இயக்குனாகவும் வெற்றி பெற்ற பிரதாப் போத்தன், ‛‛மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட 12 படங்களை இயக்கி உள்ளார்

1985ல் நடிகை ராதிகாவை திருமணம் செய்த பிரதாப் போத்தன் 1986ல் அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு 1990ல் அமலா சத்யநாத் என்பவரை மணந்த இவர் 2012ல் அவரையும் பிரிந்தார். இவருக்கு கேயா என்ற மகள் உள்ளார்.

தேசிய விருது
1985ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது 'மீண்டும் ஒரு காதல் கதை” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. கேரள மாநில அரசின் விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார் பிரதாப்.

பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.