”நான் பாகிஸ்தான் பத்திரிகையாளரை அழைக்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை” என மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் ஹமீத் அன்சாரி.
பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளரான நஷ்ரத் மிஸ்ரா என்பவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 5 முறை இந்தியா வந்ததாகவும், இங்கிருந்து திரட்டிய முக்கிய தகவல்களை அந்த நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு வழங்கியதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும், அப்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்ததாகவும், இந்தியாவில் அவரை சந்தித்ததாகவும் அவர் கூறியிருப்பதாகவும் பாஜக கூறியுள்ளது.
பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா இந்த தகவலை வெளியிட்டு, காங்கிரசையும், ஹமீது அன்சாரியையும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அந்த பத்திரிகையாளரை அழைக்கவோ, சந்திக்கவோ இல்லை என ஹமீது அன்சாரி மறுத்தார். இதைப்போல ஈரான் தூதராக இருந்தபோது இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதாக பாஜக கூறியுள்ள குற்றச்சாட்டையும் அவர் மறுத்திருந்தார்.
இந்தநிலையில் நஷ்ரத் மிஸ்ரா – ஹமீது அன்சாரி தொடர்பாக பாஜகவினர் ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து ஹமீத் அன்சாரி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சாவை 2010ஆம் ஆண்டு தீவிரவாதம் குறித்த எந்த மாநாட்டிற்கும் அழைத்ததில்லை. நான் பாகிஸ்தான் பத்திரிகையாளரை அழைக்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை. பாஜகவினர் வெளியிட்ட புகைப்படத்திற்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாம்: ’அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது’ – பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM