புதுடெல்லி: பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சாவை 2010-ம் ஆண்டு தீவிரவாதம் குறித்த எந்த மாநாட்டிற்கும் அழைத்ததில்லை என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மீண்டும் கூறியுள்ளார்.
ஈரான் தூதராக ஹமீத் அன்சாரி பணியாற்றிய காலத்தில் உளவு வேலை பார்த்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சா குற்றம் சாட்டினார். மேலும், ஹமீத் அன்சாரி குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது, அவரது அழைப்பில் பேரில், டெல்லியில் நடந்த தீவிரவாதம் குறித்த மாநாட்டில் பங்கேற்க தான் இந்தியா வந்ததாகவும், அப்போது ரகசிய தகவல்களை ஹமீத் அன்சாரி பகிர்ந்து கொண்டார் எனவும் நுஸ்ரத் மிர்சா கூறியிருந்தார்.
இதனை ஹமீத் அன்சாரி திட்டவட்டமாக மறுத்தார். இந்தநிலையில் அகில இந்திய பார் அசோசியேஷன் தலைவர் டாக்டர் ஆதிஷ் அகர்வாலா புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து ஹமீத் அன்சாரி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் பத்திரிகையாளர் நுஸ்ரத் மிர்சாவை 2010-ம் ஆண்டு தீவிரவாதம் குறித்த எந்த மாநாட்டிற்கும் அழைத்ததில்லை. நான் பாகிஸ்தான் பத்திரிகையாளரை அழைக்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை. அகில இந்திய பார் அசோசியேஷன் தலைவர் டாக்டர் ஆதிஷ் அகர்வாலா வெளியிட்ட புகைப்படத்திற்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.