வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில் தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்டில் மழைக்கால கூட்டத்தொடர், வரும் 18ம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில், பார்லி.,யின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புதிய பட்டியல் நேற்று முன்தினம் (ஜூலை 13) வெளியிடப்பட்டது. இதில், நாடகம், வாய்ஜாலம், ஊழல், ஒட்டுக்கேட்பு, திறமையற்றவர், சர்வாதிகாரம், சகுனி உள்ளிட்ட பல வார்த்தைகள் அடங்கியுள்ளன.
இந்த பட்டியலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ‛குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொய்த் தகவல்களை கூறி வருவதாகவும், அவையின் மாண்புக்கு எதிரான வார்த்தைகள் மட்டுமே சபைக் குறிப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றன. அந்த நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பே தற்போது வெளியிடப்பட்டுள்ளது’ என விளக்கமளித்தார்.
ஆனாலும், எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை கையில் எடுத்து பார்லி மழைக்கால கூட்டத்தொடரின் போது விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக பார்லி வளாகத்தில் போராட்டமும் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ‛பார்லி வளாகத்தில் உறுப்பினர்கள் தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என எந்தவித போராட்டங்களுக்கும் இனி அனுமதி கிடையாது. அதேபோல் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை’ என பார்லி செயலர் பி.சி.மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement