மும்பையில் போதைப்பொருளின் நடமாட்டம் மிகவும் தாராளமாக இருக்கும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மற்றும் இந்தியாவின் இதர பகுதியில் இருந்து மும்பைக்கு போதைப்பொருள் கடத்தி கொண்டு வரப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தை நோக்கி ஆட்டோவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போபால் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே ஆட்டோ ஒன்றை இடைமறித்து போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ஆட்டோவில் இருந்த ஜுலேகா என்ற பெண்ணின் கைப்பையில் 3 பாக்கெட்டில் 3 கிலோ எடையுள்ள சரஸ் என்ற போதைப்பொருள் இருந்தது.
ஆட்டோவில் சாஹித் என்பவரும் இருந்தார். அவர்களிடம் விசாரித்ததில் இருவரும் மும்பை அந்தேரியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்ததில், பப்லு என்ற சாஹித் மற்றும் வீர்பஹதூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் வீர் பஹதூரிடமிருந்து 6.7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியாகும். இந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வந்திருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் அமித் குமார் தெரிவித்தார். இந்த போதைப்பொருள் மும்பைக்கு ரயிலில் எடுத்து செல்ல கொண்டு சென்றபோது பிடிபட்டதாக தெரிவித்த அவர், அவை மும்பை பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பார்ட்டிகளில் சப்ளை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தார்.
இப்போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அக்கும்பலின் தலைவி ஜுலேகா உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேபாளம் நாட்டைச் சேர்ந்த வீர் பஹதூர் என்பவர் தான் தனது நாட்டிலிருந்து இந்த போதைப்பொருளை கடத்தி கொண்டு வந்து கொடுத்திருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் அமித் குமார் தெரிவித்தார். போபாலில் இந்த போதைப்பொருள் ஒரு கிராம் 1,000 ரூபாயிக்கு விற்கப்படுவதாகவும், மும்பையில் 5,000 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். சமீபத்தில்தான் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் மேலும் ரூ.350 கோடி மதிப்புள்ள போதைபொருள் பறிமுதல் செய்யபட்டது. முந்த்ரா துறைமுகத்திற்கு அடிக்கடி கண்டெய்னரில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவது குறிப்பிடதக்கது.