பிட்புல் நாய்கள் ஏன் ஆபத்தானவை? நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் 82 வயது மூதாட்டியை பிட்புல் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிட்புல் நாய்கள் ஏன் ஆபத்தானவையாக மாறுகின்றன என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பொதுவாகவே, 1980-கள் வரை இந்தியாவில் நாட்டு இன நாய்களே அதிக அளவில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்தன. எஜமானர்களுக்கு விசுவாசமாகவும் அதே சமயத்தில் எஜமானரின் குடும்பத்தையும், வீட்டையும் துணிச்சலாக பாதுகாக்கும் காவலாளியாகவும் நாட்டு நாய்கள் விளங்கியதால் ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரை அவரவர் வசதிக்கேற்ப பல இனங்களைச் சேர்ந்த நாட்டு நாய்களை வளர்த்து வந்தனர். ராஜபாளையம், கொம்பை, சிப்பிப்பாறை, கன்னி உள்ளிட்ட இனங்களைச் சேர்ந்த நாய்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
image
வெளிநாட்டு நாய் மோகம்
இந்நிலையில், 1990-க்கு பிறகே வெளிநாட்டு ரக நாய்கள் இந்தியாவுக்குள் பெருமளவில் கொண்டு வரப்பட்டன. அல்சேஷன், டாபர்மேன், ஜெர்மன் ஷெப்ஹெர்ட் ஆகிய வெளிநாட்டு இனங்கள் இந்தியர்களின் வீடுகளில் வளர்ப்பு நாய்களாக மாறின. நாளடைவில், வெளிநாட்டு இன நாய்களை வளர்ப்பதே ஒரு கெளரவம் என்றாகி விட்டது.
எஜமானர்களின் சொல்லுக்கு கட்டுப்படும்
மேற்குறிப்பிட்ட வகை நாய்களை வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் சற்று செலவு அதிகம். அவற்றுக்கென பிரத்யேக உணவுகள், முடி கொட்டாமல் இருக்க ஷாம்பு என இந்த நாய்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். செலவு அதிகமான போதிலும், எஜமானர்களுக்கு மிகவும் விசுவாசமாக இந்த நாய்கள் இருக்கும். வெளியாட்களிடம் மூர்க்கமாக நடந்து கொண்டாலும் எஜமானர்களின் சொல்லுக்கு இந்த நாய்கள் கட்டுப்படும்.
மூர்க்கம் நிறைந்த பிட்புல் நாய்கள்
இதுபோன்ற சூழ்நிலையில்தான், 2000-ம் ஆண்டுக்கு பிற்பகுதியில் பிட்புல் போன்ற மூர்க்கத்தனம் மிகுந்த வெளிநாட்டு நாய்கள் இந்தியாவுக்கு அறிமுகமாகின. இதில் பிட்புல் பிரிட்டனைச் சேர்ந்தவை. அடிப்படையாக, சண்டையிடுவதற்காகவே உருவாக்கப்பட்ட ப்ரீட் (Breed) தான் பிட்புல். குட்டையான உருவம், பெரிய வலிமையான உடல் தசைகள், சிறிய கண்கள் என இந்த நாயை பார்க்கும் போதே ஒருவிதமான அச்சம் நமக்குள் வந்துவிடும்.
பொதுவாக, பிட்புல் நாய்களுக்கு தாடை வலிமை (Jaw power) அதிகம். இதனால் அந்த நாய் ஒரு நபரை கடித்துவிட்டால் அவரால் அதன் வாயில் இருந்து விடுபடுவது கடினம். மேலும், ஒரு நபரை கடித்துவிட்டால் பிட்புல் நாய்கள் மேலும் ஆக்ரோஷமாக மாறிவிடும். இதனால் குறைந்தபட்சம் 6 அல்லது 7 பேரின் உதவி இல்லாமல் பிட்புல் நாயின் பிடியில் இருந்து விடுபடுவது மிகவும் கடினம்.
image
பல நாடுகளில் தடை
பிட்புல் நாய்கள் வெளியாட்களை மட்டுமல்லாமல் சில சமயங்களில் அதன் எஜமானர்களை தாக்கக் கூடியவை. இதுபோன்ற பல சம்பவங்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்ததால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பிட்புல் நாயை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற பல சம்பவங்கல் நடந்த போதிலும், தடை ஏதும் விதிக்கப்படாததால் பலர் பிட்புல் நாயை ஆபத்தை உணராமல் வளர்த்து வருகின்றனர்.
நிபுணர்கள் எச்சரிக்கை
இதுகுறித்து கால்நடை மருத்துவர் வினிதா பூஜாரி கூறியதாவது:
பிட்புல் நாய் பொதுவாக ஒருவருக்கு மட்டுமே கட்டுப்படும் பழக்கத்தை கொண்டது. ஒருபுறம், மிகவும் அன்பாகவும், மறுபுறம் மிக மூர்க்கமாகவும் நடந்து கொள்ளும் குணத்தை கொண்டது. அதை எப்படி வளர்க்கிறோமோ அதை பொறுத்து அதன் குணநலன்கள் மாறும். பிட்புல்லை வளர்க்கவே பிரத்யேக பயிற்சிகள் தேவை. அனைத்துக்கும் மேலாக, மேற்கத்திய நாடுகளின் சீதோஷ்ணமும், உணவும் தான் பிட்புல்லுக்கு உகந்தவை. இந்திய சீதோஷ்ணமும், உணவு வகைகளும் ஒத்துக்கொள்ளாததால் சில நேரங்களில் அது மூர்க்கமாக மாறிவிடுகிறது. அதனால்தான், இந்தியாவில் பிட்புல் நாய்களை வளர்க்க வேண்டாம் எனக் கூறுகிறோம் என்றார் அவர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.