கல்விக்கண் திறந்த காமராசரின் பிறந்தநாளில் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்” என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி என்ற நிலையை மாற்றி, அறிவுப்பசி தீர்க்க ஏழைகளுக்கு இலவசக் கல்வி உண்டு; வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய கர்மவீரர் காமராசருக்கு இன்று 120-ஆவது பிறந்தநாள். இது வரலாற்றில் பொன்னாள்!
கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகியவற்றிலும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் காமராசர் தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிவகாமி மைந்தனின் தியாகத்தை அவரது 120-ஆவது பிறந்தநாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில்புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர் பெருந்தலைவர் காமராசரின் 120-ஆவது பிறந்தநாள் இன்று. தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்துவதற்கு இந்த நாளில் உறுதியேற்போம்!
உலக அரங்கில் தமிழகத்தை தலைநிமிர வைத்தவர் கர்மவீரர். ஆனால், சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலிருந்து நீக்கப்பட்ட அவரின் பெயர் இன்னும் மீண்டும் சூட்டப்படவில்லை. உள்நாட்டு முனையத்திற்கும், மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திற்கும் உடனடியாக காமராசர் பெயர் சூட்டப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.