பிரதாப் போத்தன் நினைவலைகள்: கிட்டார் இளைஞன், வேடிக்கையும் தீவிரமும் கொண்ட கலைஞன்!

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் இன்று தன் 70வது வயதில் மறைந்தார். அவரது ‘திடீர்’ மரணத்தைப் பற்றிய செய்தி வந்ததும் சினிமா படைப்பாளிகளும் கலை ரசிகர்களும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தார்கள். பிரதாப் போத்தன் தன்னுடைய மரணம் குறித்து உள்ளுணர்வில் ஏற்கெனவே அறிந்திருந்தாரோ என்னமோ தெரியவில்லை. சமீபத்தில், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் தொடர்ந்து பதிவு செய்த மேற்கோள் வாக்கியங்கள் பெரும்பாலும் தத்துவம், வாழ்வியல் தொடர்பாகவே இருந்தன.

பிரதாப் போத்தன் என்றால் ‘சைக்கோ பாத்திரம்’ மட்டுமா?

நடிகர் ரகுவரனுக்கும் பிரதாப் போத்தனுக்கும் ஒருவகையில் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே மிகச்சிறந்த நடிகர்கள். பார்ப்பதற்கு ஸ்டைலான தோற்றத்தைக் கொண்டவர்கள். ஆனால் இவர்கள் இருவருமே ‘சைக்கோ’ பாத்திர நடிகர்களாக ரசிகர்களால் பரவலாக அறியப்பட்டது ஒருவகையான துரதிர்ஷ்டம். மனைவிகளை, பெண்களை மனதளவில் கொடூரமாகத் துன்புறுத்தும் பாத்திரத்தில் இவர்கள் சில படங்களில் நடித்திருந்தார்கள். அவர்களின் சிறந்த நடிப்பு காரணமாக அம்மாதிரியான படங்களில் மட்டுமே அவர்கள் அதிகம் நடித்தது போன்ற சித்திரம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இருவருமே நிறைய வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து தங்களுடைய அபாரமான நடிப்புத்திறனை நிரூபித்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

பிரதாப் போத்தன்

பிரதாப் போத்தன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். உதகமண்டலத்தில் உள்ள லாரன்ஸ் மெமோரியல் பள்ளியில் படித்தவர். மாணவராக இருந்த போது ஆங்கில நாடகங்களில் நடிப்பதிலும் ஓவியத்திலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. பின்னாட்களில் ‘தி மெட்ராஸ் பிளேயர்ஸ்’ என்கிற புகழ்பெற்ற ஆங்கில மேடை நாடகக் குழுவில் ஒரு முக்கியப் பங்கு வகித்தார். மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் தனது படிப்பை முடித்த பிறகு மும்பையில் உள்ள முன்னணி விளம்பர நிறுவனங்களில் ‘காப்பிரைட்டராக’ பணிபுரிந்தார்.

முதல் படத்திலேயே விருது

பொ்னாட்ஷாவின் நாடகம் ஒன்றில் நடித்த பிரதாப்பின் திறமையைப் பார்த்து வியந்த இயக்குநர் பரதன், அரவம் (1978) என்கிற மலையாளத் திரைப்படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான ‘பிலிம்போ்’ விருதை வாங்கினார் பிரதாப். தமிழிலும் மலையாளத்திலும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரதாப் போத்தன், இந்தி மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தின் மூலம் பிரதாப்பை தமிழில் அறிமுகம் செய்தார் பாலுமகேந்திரா. இதில் ஷோபாவைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறவராக சிறிய காட்சியில் தோன்றியிருந்தார் பிரதாப்.

பிரதாப் போத்தன், சரிதா

‘மூடுபனி’ மற்றும் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ஆகிய இரு திரைப்படங்களிலும் பிரதாப் ஏற்றிருந்த பாத்திரம் வித்தியாசமானது. ‘மூடுபனி’யில் பாலியல் தொழிலாளிகளைத் தேடித் தேடிக் கொல்லும் கொடூரமான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் இதே படத்தின் இன்னொரு காட்சியில் கிட்டாரை மீட்டிக்கொண்டு ‘என் இனிய பொன்நிலாவே’ என்று மென்மையான குரலில் பாடி நடிக்கும்போது கொலைகாரனுக்குரிய சுவடே இல்லாமல் இனிமையான இளைஞனாக மாறியிருப்பார். இதைப் போலவே ‘வறுமையின் நிறம் சிவப்பு’ திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் மீது மிகையான காதலைக் கொட்டுகிற ‘நாடக இயக்குநர்’ வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் ஸ்ரீதேவியோ கமலைத்தான் விரும்புவார். இதைக் கண்டு எரிச்சலும் கோபமும் கொள்ளும் காட்சிகளில் பிரதாப்பின் கொதிப்பு அசலானதாக இருக்கும்.

‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படத்தில் மிக நோ்மறையான பாத்திரம். இப்படியொரு ஆசிரியர் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்று நமக்குள் தோன்றுமளவிற்கு இனிமையான பாத்திரத்தில் நடித்திருப்பார். வீட்டை விட்டு ஓடிப் போகும் இளம் காதலர்களை அமர்த்தி வைத்து “உன்னை நாலைஞ்சு பேரு அடிச்சுப் போட்டுட்டு அந்தப் பொண்ணைத் தூக்கிட்டுப் போனா என்ன செய்வே?” என்று மாணவனை நோக்கி இவர் இதமாக கேள்வி கேட்கும் காட்சி அருமையானது. விடலைக் காதல்களை அதுவரை ரொமான்டிசைஸ் செய்துகொண்டிருந்த தமிழ் சினிமாவில், அதன் மீதான மயக்கத்தை விலக்கி, யதார்த்தத்திற்கு நெருக்கமான குரலை எழுப்பியது பிரதாப்பின் பாத்திரம்.

பிரதாப் – ‘மௌன ராகம்’ மோகனின் முன்னோடி

மகேந்திரன் இயக்கிய ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’வில் இன்னொரு வித்தியாசமான பாத்திரம். முரண்டு பிடிக்கும் புது மனைவியிடம் பொறுமையாகவும் இதமாகவும் நடந்துகொள்ளும் ஜென்டில்மேன் கணவர் பாத்திரத்தை பிரதாப் போத்தன் சிறப்பாகக் கையாண்டிருந்தார். ‘மௌனராகம்’ மோகனின் பாத்திரத்திற்கு முன்னோடி இதுவே. விசு எழுத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘குடும்பம் ஒரு கதம்பம்’ திரைப்படத்தில் ஓர் அசட்டுத்தனமான கணவன் பாத்திரத்தில் வேடிக்கையாக நடித்திருந்தார். மனைவியின் அலுவலகம் விடும் நேரம் வரைக்கும், வோ்க்கடலையைக் கொறித்துக்கொண்டு சினிமா சுவரொட்டிகளை வேடிக்கை பார்த்து இவர் நேரத்தைக் கடக்கும் காட்சி சுவாரஸ்யமாக இருக்கும். ‘சிந்து பைரவி’யில் சுஹாசினியின் மீதுள்ள மௌனமான காதலை விதம் விதமாக வெளிப்படுத்தும் பாத்திரத்தை ரசிக்கத்தக்க வகையில் கையாண்டிருப்பார் பிரதாப்.

பிரதாப் போத்தன், ராதிகா

பழைய படங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். சமீபத்தில் வெளிவந்த ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ திரைப்படத்தில் ஆர்வமுள்ள மாணவியை ஊக்கப்படுத்தி மேலே கொண்டு வரும் ஆசிரியர் பாத்திரத்தில் ஆத்மார்த்தமாக நடித்து அசத்தியிருப்பார் பிரதாப் போத்தன். அவர் இறுதியாக நடித்துக்கொண்டிருந்தது, மோகன்லால் இயக்கும் ‘பாரோஸ் – நிதி காக்கும் பூதம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தில். ஆனால் காலம் அதற்குள் முந்திக் கொண்டது.

வெற்றித் திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர்

நடிகர் என்கிற பரிமாணத்தைத் தாண்டி இயக்குநராகவும் ஜொலித்தவர் பிரதாப் போத்தன். இவர் இயக்கிய முதல் தமிழ்த் திரைப்படமே வித்தியாசமானது. மனநலம் குன்றிய இரு மாற்றுத் திறனாளிகளுக்குள் ஏற்படும் பிரியத்தையும் நேசத்தையும் அடிப்படையாகக் கொண்டது. ராதிகாவுடன் இணைந்து இவரே நடித்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற இந்தத் திரைப்படத்திற்கு ‘சிறந்த அறிமுக இயக்குநர்’ என்னும் தேசிய விருது கிடைத்தது. 1987-ல் வெளிவந்த ‘ரிதுபேதம்’ என்கிற மலையாளத் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான ‘பிலிம்போ்’ விருதைப் பெற்றார். ‘டெய்ஸி’, ‘ஒரு யாத்ரமொழி’ போன்ற மலையாளத் திரைப்படங்கள் பிரதாப்பிற்கு சிறந்த இயக்குநர் என்கிற அடையாளத்தை உருவாக்கித் தந்தன.

ராபர்ட் லுட்லம் எழுதிய ‘Bourne’ தொடர் வரிசை நாவல்கள் புகழ்பெற்றவை. இந்த வரிசையில் முதல் நாவலான ‘The Bourne Identity’-ஐ ஹாலிவுட் மோப்பம் பிடித்துத் திரைப்படமாக்குவதற்குள் அதைத் தமிழிற்குக் கொண்டு வந்துவிட்டார் பிரதாப். 1989-ல் கமல் நடிப்பில் ‘வெற்றி விழா’ என்னும் திரைப்படமாக இது வெளிவந்தது. இதில் ‘ஜிந்தா’ என்னும் பாத்திரத்தில் நடிகர் சலீம் கௌஸை ஸ்டைலான பாத்திரத்தில் திறமையாகப் பயன்படுத்தியிருந்தார். இந்த ‘ஸ்பை’ திரில்லர் பாணிக்கு முரணாக ‘மை டியர் மார்த்தாண்டன்’ என்னும் நகைச்சுவைத் திரைப்படத்தை 1990-ல் இயக்கியிருந்தார். இது ஓர் ஆங்கிலத் திரைப்படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டது.

பிரதாப் போத்தன்

‘லக்கி மேன்’ என்கிற இன்னொரு நகைச்சுவைத் திரைப்படமும் பிரதாப் இயக்கியதுதான். நெப்போலியனை ஹீரோவாக வைத்து இயக்கிய ‘சீவலப்பேரி பாண்டி’ முற்றிலும் வேறு வகையான திரைப்படம். பி.லெனின் இயக்கத்தில் வெளிவந்த ‘சொல்லத் துடிக்குது மனசு’ திரைப்படத்தின் கதை பிரதாப் போத்தன் எழுதியதுதான். ‘ஜீவா’, ‘ஆத்மா’ என்று பல வெற்றித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் பல்வேறு ஜானர்களில் படங்களை இயக்கிய பெருமை பிரதாப் போத்தனுக்கு உண்டு.

கிட்டார் இளைஞன் – ‘என் இனிய பொன் நிலாவே’

பிரதாப் போத்தனின் தோற்றம் ஒரு ‘எலைட் இளைஞனுக்கே’ உரித்தானது. ஜீன்ஸ் பேண்ட், கதர் ஜிப்பா, கிட்டார், வாயில் தொங்கும் சிகரெட், வசீகரமான ஹோ்ஸ்டைல் என்று எண்பதுகளின் அலட்சியமான இளைஞனின் தோற்றத்தைக் கொண்டிருப்பார். தடித்த கண்ணாடிக்குப் பின்னால் உருளும் முட்டை விழிகளும், மழலையான உச்சரிப்பும் இவருக்கு வித்தியாசமான அடையாளத்தைத் தந்தன. இவருடைய ‘எலைட்’ தோற்றம் காரணமாகவே பின்னாட்களில் டாக்டர், சைக்காலஜிஸ்ட், காலேஜ் பிரின்ஸிபல் போன்ற பாத்திரங்கள் கிடைத்தன என்று தோன்றுகிறது.

1985-ல் நடிகை ராதிகாவை மணம் புரிந்தார் பிரதாப். ஆனால் இந்தத் திருமண வாழ்க்கை ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. இந்த விவாகரத்திற்குப் பிறகு அமலா சத்யநாத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 22 வருடங்களுக்குப் பிறகு இந்தத் திருமணமும் முடிவிற்கு வந்தது. ‘கேயா’ என்கிற மகள் பிரதாப்பிற்கு உண்டு. சிறந்த பாடகியான தன் மகளைப் பற்றி ‘The Sweet soul of my life’ என்று ஃபேஸ்புக் குறிப்பில் எழுதியிருந்தார் பிரதாப்.

மூடுபனி

இளம் இயக்குநர்களை அடையாளப்படுத்தும் ‘நாளைய இயக்குநர்’ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த பிரதாப் போத்தன், கடைசிக் காலத்தில் விளம்பரப் படங்களையும் இயக்கும் பழைய தொழிலையும் கைவிடாமல் இருந்தார். ’22 பீமேல் கோட்டயம்’ என்கிற மலையாளத் திரைப்படத்திற்காக ‘சிறந்த எதிர்மறைப் பாத்திரம்’ என்பது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற பிரதாப்பின் மரணம் உறக்கத்திலேயே நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

பிரதாப் போத்தன் என்றதுமே கலைந்த தலைமுடியும் கையில் கிட்டாரும் கண்களில் பிரியமுமாக ‘என் இனிய பொன்நிலாவே’ என்று இதமான குரலில் பாடிக்கொண்டிருக்கும் ‘சந்துரு’ என்கிற இளைஞனின் பாத்திரமே சட்டென்று நம் நினைவில் வந்து நிற்கிறது. தோற்றம் காரணமாக வேடிக்கையான நடிகராகக் கருதப்பட்டாலும் பல பெண்களுக்குப் பிடித்தமான நடிகராகவும் பிரதாப் இருந்தார் என்பதில் ஆச்சரியமில்லை. அத்தனை ஸ்டைலான தோற்றத்தையும் உடல்மொழியையும் கொண்டவர்.

பிரதாப் போத்தன்

சைக்கோத்தனம், நகைச்சுவை, வேடிக்கை, தீவிரம் என்று பல வித்தியாசமான பாத்திரங்களில் நடித்த, உருவாக்கிய பிரதாப் போத்தனை சினிமா ரசிகர்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.

பிரதாப் போத்தன் நடித்த, இயக்கிய படங்களில் உங்களின் ஃபேவரைட் எது? கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.