கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் அந்த மாணவி எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்திலிருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி மாணவியின் தந்தை ராமலிங்கம் தாய் செல்வி மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்
மாணவியின் சடலத்தில் பல்வேறு இடங்களில் காயங்கள் காணப்பட்டதால், அவர் கொல்லப்பட்டதாக மாணவியின் தாய் குற்றஞ்சாட்டினார்.
இதற்க்கிடையே மாணவி பயன்படுத்திய நோட்டு புத்தகங்களை ஆய்வு செய்த போது அதில் மாணவி கல்லூரி தாளாளர் மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
தனக்கு வகுப்பு எடுக்கும், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை ஆகியோர் தன்னை படிக்காமல் விளையாட்டுத்தனமாக இருப்பதாக கூறி மற்ற மாணவர்கள் முன்னிலையில் கண்டித்தனர் என்றும் இது தனக்கு பெருத்த அவமானமாக இருந்ததால் இந்த முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும், தயவு செய்து மாணவிகளை இப்படி பேசாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் அந்த மாணவி.
மேலும் தனது பள்ளிக் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை தனது பெற்றோரிடம் கொடுத்துவிடும் படியும், தனது தோழிகளிடமும், பெற்றோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்
இதற்க்கிடையே மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
மாணவியின் பெற்றோர் தெரிவித்த குற்றசாட்டுகள் குறித்து விளக்கம் கேட்ட போது, சக்தி பள்ளியின் நிர்வாகி ரவிக்குமார் தான் மீண்டும் அழைப்பதாக கூறி செல்போன் அழைப்பை துண்டித்தார்