பாட்னா: பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னா சென்றார். மாநில சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பிரதமரை கொலை செய்ய சதித் தீட்டம் தீட்டியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
உளவுத் துறை அளித்த தகவலின்படி, கடந்த 11-ம் தேதி மாலை பாட்னாவின் நயா டோலா பகுதியில் பாட்னா போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு முகமது ஜலாலுதீன், அக்தர் பர்வேஸ் ஆகிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதில் அக்தர் பர்வேஸ், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார்.
இருவரிடமும் நடத்திய விசாரணையின் அடிப் படையில் அர்மான் மாலிக் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பாட்னாவின் புல்வாரி ஷெரீப் பகுதி போலீஸ் ஏஎஸ்பி மணீஷ் குமார் கூறும்போது, “கைது செய்யப் பட்ட தீவிரவாதிகளுக்கும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் தொடர்பு உள்ளது. இவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி உள்ளனர்” என்று தெரிவித்தார்.
பாட்னா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: முன்கூட்டியே கண்டுபிடித்த தால் பிரதமர் மோடியை கொல்லும் சதி திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம். பிரதமரின் பயணத்துக்கு முன்பாக கடந்த 6, 7-ம் தேதிகளில் பாட்னாவில் தீவிரவாதிகள் ஒன்று கூடியுள்ளனர். அப்போது பிரதமரை எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்து சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
கேரளா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பாட்னாவுக்கு வந்து ஆயுத பயிற்சி பெற்று உள்ளனர். அவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து பல்வேறு பெயர்களில் ஓட்டல்களில் தங்கி உள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்ட அக்தர் பர்வேஸின் வங்கிக் கணக்கில் மட்டும் அண்மையில் ரூ.80 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது.
தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஏராளமான துண்டு பிரசுரங்களை கைப்பற்றி உள்ளோம். அதில் வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள், வியூகங்கள் இடம்பெற்றுள்ளன. நுபுர் சர்மா விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ராஜஸ்தானை சேர்ந்த தையல்காரர் கன்னையா லால், மகாராஷ்டிராவை சேர்ந்த மருந்து கடைக்காரர் உமேஷ் கோல்கே ஆகியோர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர்.
இதேபோல நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை அடுத்தடுத்து கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த தீவிரவாத குழுவில் 26 பேர் உள்ளனர். அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தேசிய புலனாய்வு அமைப்பும் (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழுவோடு தொடர்புடைய உள்ளூர், வெளி மாநில இளைஞர்களை என்ஐஏ அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதற்கிடையில், தீவிரவாதிகள் தங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் இல்லை என்று பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மறுத்துள்ளது.