புதுடெல்லி: புதிதாக வாங்கிய செல்போன், லேப்டாப், டேப்லட் உடனடியாக பழுதானால் ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே கிடையாது. இத்தகைய சாதனங் களை ஆன்லைன் மூலமாகவே பலரும் வாங்கியிருப்பர். அவற்றுக்கு உத்தரவாதம் இருந்தாலும், அதை பழுது நீக்கித் தரும் மையங்களைத் தேடி அலைவது பெரும் பிரச்சினையாக இருக்கும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ‘பழுது நீக்கம் உங்கள் உரிமை’ (Right to Repair) எனும் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நுகர்வோரை வலுமிக்கவர்களாக மாற்றும் நோக்கில் இந்த சட்டம் இருக்கும்.
மின்னணு சாதனங்களை தயாரிப்போர் வேண்டுமென்றே குறிப்பிட்ட காலத்திற்குள் உதிரிபாகங்கள் பழுதடையும் வகையில்தயாரிக்கின்றனர். அல்லது விற்பனையை அதிகரிக்க புதிய தயாரிப்புகள் வாங்க வேண்டும் என்பதற்காக பழுது ஏற்படுவது போன்றநடவடிக்கைகளை தங்களதுதயாரிப்பு மூலம் மேற்கொள்கின்றனர். புதிய சட்டம் அமலுக்குவந்தால் இத்தகைய செயல்முறை பலனளிக்காது.
இந்த நடவடிக்கை மூலம் எளிதான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தவும், பழுது நீக்க நடவடிக்கைகள் மூலம் பல வேலை வாய்ப்புகள் உருவாகவும் வழி ஏற்படும்.
இந்த சட்டத்தை வரையறை செய்வது தொடர்பாக சட்ட கருத்துகளை நுகர்வோர் பாதுகாப்பு துறை ஒருங்கிணைந்த விதிகளை வடிவமைத்துள்ளது.நேற்று முன்தினம் இது தொடர்பான முதலாவது கூட்டம் நடைபெற்றது. அதில்செல்போன், டேப்லட், நுகர்வோர் மின்னணு சாதனங்கள், ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் சார்ந்த சாதனங்கள் உள்ளிட்டவற்றை சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.
உற்பத்தியாளர்கள் திட்டமிட்டு ஒரு தயாரிப்பை பழமையான தயாரிப்பாக வெகு சீக்கிரத்தில் மாற்றும் நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சட்ட விதிகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
ஒரு தயாரிப்புக்கான உதிரிபாகம் அதன் வாழ்நாள் வரையில் சந்தையில் கிடைப்பதை தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அத்தகைய தயாரிப்புகள் பழுதானால் அதை சரி செய்து தர வேண்டிய பொறுப்பு உற்பத்தியாளர்களுக்கு உள்ளது என்றும் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர் தங்கள் நிறுவனத் தயாரிப்புகளை அதன் உத்தரவாத காலம் இருக்கும்போது தனியாரிடம் பழுது நீக்கக் கூடாது என்றும் அவ்விதம் செய்தால் அதற்கு நிறுவனம் பொறுப்பேற்காது என்பன போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளன.
இதனால் நிறுவனங்களின் பழுது நீக்கும் மையங்கள் ஆதிக்கம் செலுத்துபவைகளாக விளங்குகின்றன. இதை நீக்குவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
பழுது நீக்கம் உங்கள் உரிமை என்பது உலகின் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது.