மும்பை: மகாராஷ்டிர அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை ரூ.3-ம் குறைத்துள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்த விலைக் குறைப்பு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. இதுகுறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, “கடந்த மே 4-ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது.
இதுபோல மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், முந்தைய அரசு வரியைக் குறைக்கவில்லை. எனவே, இப்போது வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்” என்றார்.
துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது “சிவசேனா – பாஜக அரசு பொறுப்பேற்ற போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
அதை இப்போது நிறைவேற்றி உள்ளோம்” என்றார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 சிவசேனா எம்எல்ஏக்கள் போர்க் கொடி தூக்கினர்.
இதனால் உத்தவ் தாக்கரே பதவி விலகினார்.இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவசேனா அணி மற்றும் பாஜக இணைந்து புதிய அரசை அமைத்துள்ளன.