சென்னை: வாழ்நாள் முழுவதும் சாதிக்கு எதிராகப் போராடிய தந்தை பெரியாரின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில், விஷமத்தனமான கேள்வியால் மாணவர்கள் நெஞ்சில் நஞ்சைத் தூவ முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு பருவத்தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என்று கேட்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சாதிப் பிரிவுகள் கூடாது என்று கற்றுத்தர வேண்டியவர்களே சாதியை முன்னிலைப்படுத்தி கேள்வி கேட்கலாமா?
அதுவும், வாழ்நாள் முழுவதும் சாதிக்கு எதிராகப் போராடிய தந்தை பெரியாரின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில், விஷமத்தனமான கேள்வியால் மாணவர்கள் நெஞ்சில் நஞ்சைத் தூவ முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. இனியும் இதுபோல நேரிடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கடும் நடவடிக்கைகள் அவசியம்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.