அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் தமிழக அரசியலில் ஒவ்வொரு நாளும் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பி.எச். பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதே நாளில், மறுபுறம், ஓ. பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்தில் நுழைந்தார். அப்போது, இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அதிமுக தலைமை அலுவலகம் போர்க்களமானது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
அப்போதே ஓ.பி.எஸ் தன்னை அதிமுகவில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும், தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இ.பி.எஸ்-க்கு இல்லை என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மேலும் 21 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி அறிவித்தார். அதே போல, ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமி உள்பட இ.பி.எஸ் ஆதரவாளர்கள் 66 பேரை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக்கொண்டு எதிர் முகாமைச் சேர்ந்தவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர்.
இந்த சூழலில்தான், அதிமுக பொதுக்குழுவில் தன்னை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.
அ.தி.மு.க.வில் 98 சதவீத தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழக உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆதரவை பெற்ற எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு போட்டியாளராக திகழ்ந்த ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டு உள்ளார். ஆனால், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவை இந்த விவகாரங்களில் இன்னமும் எந்த தீர்ப்பு வழங்கவில்லை.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் அடுத்த கட்டமாக தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களை நாடி உள்ளனர். இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு இடையூறுகளை ஏற்படுத்த முடியுமா என்று முயற்சி செய்து வருகிறார்கள்.
ஓ.பி.எஸ் அணியினர், தங்களது அணிதான் உண்மையான அ.தி.மு.க. என்று காட்டுவதற்காக அடுத்தடுத்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒடுக்குவதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்து ஆவணங்களையும் முறைப்படி ஒப்படைத்துள்ளனர். ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் 90 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்று கையெழுத்து போட்டிருக்கும் படிவங்களையும் கொடுத்துள்ளனர்.
அதிமுக கட்சி விதிகளில் முறைப்படி திருத்தங்கள் செய்யப்பட்ட தகவல்களும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய உள்ளது. தேர்தல் ஆணையத்தின் முந்தைய உதாரணங்கள் அடிப்படையில் பார்த்தால் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முடிவு எடுக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அப்படியான நிலை ஏற்பட்டால், அதிமுக தலைமைக் கழகம், கட்சி, கட்சி சின்னம் என எல்லாமும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு சென்று விடும். ஓ.பி.எஸ் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
ஓ.பி.எஸ் தரப்பு இதை தடுக்க, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலம் என்று அடுத்தடுத்து ஆலோசனை செய்து வந்தனர். இ.பி.எஸ் எப்படி பொதுக்குழு நடத்தி அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டாரோ, அந்த பொதுக்குழுவையே கேள்விக்குட்படுத்தும் வகையில், ஓ.பி.எஸ் அணி, அதிமுக போட்டி பொதுக்குழுவை நடத்தலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.
அந்த பொதுக்குழு கூட்டத்தை சென்னையில் நடத்தலாமா அல்லது வேறு நகரத்தில் நடத்தலாமா என்று விவாதித்து வருகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு மாநில அளவில் மிகவும் குறைவான ஆதரவாளர்களே உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களில் சுமார் 100 முதல் 150 பேர் வரை ஆதரவாளர்கள் இருப்பார்கள் என்று தெரிகிறது. இவர்களை வைத்து போட்டி பொதுக்குழுவை நடத்த முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள். இப்படி போட்டி பொதுக்குழுவை நடத்தி அதில் சில தீர்மானங்களை நிறைவேற்றி தலைமை தேர்தல் ஆணையம், நீதிமன்றம், சட்டப்பேரவை, மற்றும் வங்கிகளுக்கு ஆவணங்களை அனுப்ப திட்டமிட்டு உள்ளனர்.
ஓ.பி.எஸ் அணி இந்த நடவடிக்கையின் மூலம், எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு அணைபோட முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஓ.பன்னீர் செல்வம் அணியினரின் போட்டி பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்று அரசியல் நோக்கர்கள் சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்புகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“