மும்பை: தெலுங்கில் ‘விஷ்ணு’ என்ற படத்தில் அறிமுகமானவர், நீது சந்திரா. பீகார் மாநிலத்தை சேர்ந்த அவர், ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். போஜ்புரி, கன்னடம், கிரிக், ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்திருக்கும் அவர், தமிழில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘ஆதி-பகவன்’, ‘சேட்டை’, ‘சிங்கம் 3’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு வெற்றிகரமான கதா நாயகியின் தோல்விக்கதையே எனது கதை. தேசிய விருது வாங்கிய 13 பேருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளேன். ஆனால், இன்று வேலை இல்லாமல் இருக்கிறேன். ‘மாதம் ரூ.25 லட்சம் தருகிறேன், என் மனைவியாக இருக்கிறீர்களா’ என்று ஒரு பெரிய தொழிலதிபர் என்னிடம் கேட்டார். மனைவியாக இருக்க சம்பளம் தர நினைப்பவர்கள் ஏனோ நடிக்க வாய்ப்பு தருவதில்லை. இதை நினைத்துதான் கவலையாக இருக்கிறது. நிறைய படங்களில் நடித்தும் கூட நான் தேவையில் லாதவள் போல் உணர்கிறேன்.