குஜராத்தில், கனமழை காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதால், ஏக்தா நகரில் இருந்து வதோதரா ரயில் நிலையம் செல்ல முடியாமல் தவித்த சென்னை ஐஐடி மாணவருக்கு காரை முன் பதிவு செய்து ரயில்வே உதவியுள்ளது. இதற்கு, அந்த மாணவர் நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பொறியியல் மாணவர் சத்யம் காத்வி குஜராத்தின் ஏக்தா நகரில் இருந்து வதோதரா செல்லும் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார், அங்கிருந்து சென்னைக்கு செல்லவிருந்தார். ஆனால், கனமழை காரணமாக ஏக்தா நகரில் இருந்து செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது.
கடுமையான பருவ மழையால் நமது நாட்டின் எந்த பகுதியிலும் ரயில் சேவைகள் தடைபடுவது ஒன்றும் புதிதல்ல. இருப்பினும், ஒரு மாணவர் சென்னை ஐஐடி-க்கு செல்வதற்கான தனது திட்டத்தை அடைமழை கெடுத்தபோது, இந்திய இரயில்வே அவருக்கு உதவ முன்வந்தது. மனதை நெகிழச் செய்யும் இந்த செய்தி தற்போது வைரலாகி, ஆன்லைனில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இதுபோன்ற சூழ்நிலைகளில் பணத்தைத் திரும்பப் பெறுவதே சிறந்தது என ஒரு பயணியின் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த முறை ரயில்வே பணத்தை திரும்ப அளிப்பதை நிறுத்தவில்லை. ஆனால், ஒரு வீடியோ செய்தியில், ஏக்தா நகர் ஸ்டேஷனில் உள்ள ஊழியர்கள் எப்படி வதோதரா செல்வதற்காக ஒரு காரை முன்பதிவு செய்தார்கள் என்றும் அதனால், தான் சென்னைக்கு செல்ல வேண்டிய ரயிலைப் பிடிக்க முடிந்தது குறித்தும் அந்த இளைஞர் விளக்கியுள்ளார்.
அவர் ரயில்வே ஊழியர்களைப் பற்றி கூறுகையில், “ஒவ்வொரு ரயில்வே பயணிகளுக்கும் அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அவர்கள் காட்டினார்கள். “ஓட்டுனர் நல்லவர். வதோதராவில் இருந்து ரயிலைப் பிடிப்பதை அவர் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார்” என்று அவர் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். வதோதரா ரயில் நிலையத்திலும் ரயில்வே அதிகாரிகள் எங்களுக்காக தயாராக இருந்தனர். அவர்கள் எனக்கு உதவினார்கள். நான் பிளாட்பாரத்தை தேட வேண்டிய அவசியமும் இல்லை. நான் என் சாமான்களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எனக்காக அனைத்தையும் செய்தார்கள்” என்று அவர் விளக்கினார், தனது பயணத்தைத் தொடர முடிந்ததற்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
வதோதரா டி.ஆர்.எம் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ செய்தி ஆன்லைனில் பரவலான கவனத்தை ஏற்படுத்தியது. துன்பகரமான நேரத்தில் ஆர்வமுள்ள மாணவருக்கு உதவ ரயில்வே ஊழியர்களின் முயற்சியை பலரும் பாராட்டினர்.
இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ரயில்வே ஊழியர்கள் 2019 ஆம் ஆண்டில் ஒரு மனிதனுக்கு தனது தாயுடன் தொடர்பு கொள்ள உதவியபோது, தங்கள் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”