பள்ளி கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது 2019-20ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வைத்திருந்தால், அம்மாணவர்களை நடத்துநர்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தி இருந்தார். மேலும் நடப்பு ஆண்டு பேருந்து பயண அட்டை வழங்கும் வரை இது பொருந்தும் என தெரிவித்து இருந்தார் அமைச்சர்.
ஆனால் பல வழித்தடத்தில் பயண அட்டை இல்லை என நடத்துநர்கள் பள்ளி மாணவர்களை இறக்கி விடுவதாக புகார்கள் அதிகாரிகளுக்கு வந்துள்ளது. எனவே தற்போது பயண அட்டை வழங்குவதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் சென்னையில் அனைத்து வழித்தடத்திலும் பள்ளி சீருடை அல்லது பழைய பேருந்து அடையாள அட்டை இருந்தால் அனுமதிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல் அரசு கலைக்கல்லூரி, இசைக்கல்லூரி, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை, கல்லூரி தொழிற்பயிற்சி நிலைய மாணவ / மாணவியரும் அடையாள அட்டை வைத்திருந்தால் பேருந்தில் இலவசம் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை மீறி செயல்படும் நடத்துநர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் அன்பு ஆபிரகாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
– செய்தியாளர்: ராஜ்குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM