சென்னை: தமிழக அரசு கொண்டு வரவுள்ள மாநில கல்விக் கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு தர வேண்டும் என்று அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்றுசெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதம்: சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் உயர்கல்வி சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி இந்த மாதத்துக்குள் பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்கூறியுள்ளார். ஆனால், உண்மையில் தேசிய கல்விக் கொள்கையில் இந்தி படிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சூழலே உள்ளது. அதனால்தான் இருமொழிக் கொள்கை போதும் என்ற நிலையில் உறுதியாக உள்ளோம்.
அதேநேரம் தமிழகத்தில் உள்ளமத்திய அரசின் கேந்திர வித்யாலயா, சைனிக் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ்மொழி பாடத்தை கட்டாயமாக்க மத்திய அமைச்சர் முருகன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், நீட் தேர்வு சட்ட மசோதா ஆளுநர் மாளிகை பரிசீலனையில் உள்ளதாகக் கூறுவது புதிய தகவலாக உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்.
மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை தமிழக அரசு தற்போது வடிவமைத்து வருகிறது. இதற்கு ஆளுநர் முழு ஆதரவு வழங்க வேண்டும். இனம் மற்றும் மொழிரீதியாக எவ்வித வேறுபாடும் இல்லாமல் இருப்பதுதான் திராவிட மாடல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். எனவே, மதவாதத்தைத் தூண்டும் வகையில் யாரும் செயல்படக் கூடாது.
இவ்வாறு அமைச்சர் க.பொன்முடி கூறினார்.