மூக்கு வழியாக செலுத்தும் மருந்தால், கொரோனா தாக்கம் 94 சதவீதம் குறையும்..!! – ஆய்வில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி,

கொரோனாவை குணப்படுத்த மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ மருந்துக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில், ‘பாபிஸ்பிரே’ என்ற பிராண்ட் பெயரில், இந்த மருந்து கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த மருந்தின் பலன்கள் குறித்து மும்பையை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘கிளன்மார்க்’ ஆய்வு நடத்தியது. தடுப்பூசி செலுத்திய மற்றும் தடுப்பூசி செலுத்தாத 306 பேரை பயன்படுத்தி ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் லேசான கொரோனா அறிகுறிகளுடன் இருந்தனர். நாட்டில் 20 பரிசோதனை மையங்களில் ஆய்வு நடந்தது. டெல்டா, ஒமைக்ரான் வைரஸ்கள் உச்சத்தில் இருந்தபோது, இது நடத்தப்பட்டது.

24 மணி நேரத்தில் குறைந்தது

306 பேரிடம் ஒரு நாசி துவாரத்துக்கு ஒரு ஸ்பிரே வீதம் 2 ஸ்பிரேக்கள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் 6 தடவை ஸ்பிரே செலுத்தப்பட்டது. 7 நாட்கள் இந்த சிகிச்சை தரப்பட்டது.

இதில், கொரோனா தாக்கியவர்களுக்கு ஸ்பிரே மருந்து செலுத்தப்பட்ட 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்கம் 94 சதவீதமும், 48 மணி நேரத்தில் 99 சதவீதமும் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும், செலுத்தாதவர்களுக்கும் ஒரே மாதிரியான முடிவுகளே வெளிவந்தன.

இந்த ஆய்வு முடிவுகள், ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

முக்கிய பங்கு

பயன்படுத்துவதற்கு எளிமையான இந்த மருந்து, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான மோனிகா டாண்டன் தெரிவித்தார். மருந்தில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு, நாசி பாதையில் வைரஸ் நுழைவதை தடுப்பதுடன், அதை கொல்வதால், வைரஸ் பிரதி எடுக்கும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. அதனால்தான், வைரஸ் தாக்கம் வேகமாக குறைவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த மருந்தை பயன்படுத்தினால், கொரோனாவில் இருந்து குணமடைவதற்கான சராசரி 3 நாட்கள் ஆகும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.