புதுடெல்லி: ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பிரிவில் சேருவதற்கான, ‘கியூட்’ எனப்படும் தகுதி நுழைவு தேர்வு நாடு முழுவதும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பங்கேற்க 14.9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். முதல் கட்ட தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக, இந்தியா மற்றும் வெளிநாடுகள் உட்பட மொத்தம் 510 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வில் பங்கேற்கும் 98 சதவீதம் பேருக்கு அவர்கள் விரும்பி கேட்ட தேர்வு மையங்களே ஒதுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது. ஆனால், நேற்று தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், பல மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் மாற்றப்பட்ட விவரம் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் அந்த இடத்துக்கு சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வை தவற விட்டனர். இது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் நேற்று கூறுகையில், ‘மையங்கள் மாற்றத்தால் தேர்வை தவறி விட்டர்களுக்கு ஆகஸ்ட்டில் நடக்கும் 2ம் கட்ட தேர்வின் போது வாய்ப்பு அளிக்கப்படும்,’ என தெரிவித்தனர்.* இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கை மாணவ, மாணவிகள் பங்கேற்கும் 2வது மிகப் பெரிய நுழைவு தேர்வாக கியூட் உள்ளது. இதற்கு மொத்தம் 14.9 லட்சம் மாணவர்கள் விண்ணபித்து உள்ளனர்.* மருத்துவ இளங்கலை படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுத, இந்தாண்டு 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.