வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-ரஷ்யாவிடம் இருந்து ‘எஸ் – 400’ ஏவுகணை சாதனங்கள் வாங்க விதிக்கப்பட்டுள்ள தடையில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்ட திருத்த மசோதா, அமெரிக்க பார்லி.,யில் நிறைவேறியது.
கடந்த, 2014ல் கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்ததை கண்டித்து அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அத்துடன் இதர நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து நவீன ஏவுகணை உள்ளிட்ட தளவாடங்களை வாங்குவதை தடுக்கும் வகையில் ‘காட்சா’ சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், ரஷ்யாவிடம் இருந்து எஸ் – 400 ஏவுகணை வாங்க ஒப்பந்தம் செய்த துருக்கிக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதுபற்றி கவலை கொள்ளாத இந்தியா, 2019ல், ரஷ்யாவிடம், 35ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து எஸ் – 400 ஏவுகணை சாதனங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி நிலவி வந்தது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ் – 400 ஏவுகணைகளை வாங்குவதற்கான தடையில், இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் காட்சா சட்ட திருத்த மசோதா, அமெரிக்க பார்லி., பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி., ரோ கன்னா தாக்கல் செய்து பேசியதாவது:அண்டை நாடான சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.
அதனால் இந்தியா ரஷ்யாவிடம் எஸ் – 400 ஏவுகணைகளை வாங்க அனுமதிக்க வேண்டும். இந்த நடவடிக்கை இந்தியா – அமெரிக்கா இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். எனவே இந்த மசோதாவை கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து நடந்த குரல் ஓட்டெடுப்பில் பெரும்பான்மை எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் காட்சா சட்ட திருத்த மசோதா நிறைவேறியது, உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement