ரூ.4 கோடியில் 40 அறுவை சிகிச்சைகள்: அமெரிக்க மாடல் அழகி போல மாற நினைத்த பிரேசில் அழகிக்கு நேர்ந்த விபரீதம்

பிரேசிலியா,

சினிமா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றி வலம் வரும் சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களை கவர்ந்த பிரபலங்களைப் போல அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என நினைத்து அதிகம் மெனக்கெடுவதும் அவ்வப்போது நடக்கிறது.

அப்படி பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவர், உலகப்புகழ் பெற்ற அமெரிக்க மாடல் அழகியாக கிம் கர்தாஷியன் உருவ அமைப்பை பெறுவதற்காக கடந்த 12 ஆண்டுகளில் 40 அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார். ஜெனிபர் பாம்ப்லோனா என்ற அந்த மாடல் அழகி தன்னுடைய 17 வயதில் இருந்தே கிம் கர்தாஷியனை போல மாறுவதற்கான அறுவை சிகிச்சைகளை செய்து வந்துள்ளார். அப்படி 12 ஆண்டுகளில் சுமார் ரூ.4 கோடி செலவில் 40-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். இதனால் ஜெனிபர் பாம்பலோனா பெருமளவில் பிரபலமானார்.

சமூக வலைதளத்தில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை லட்சங்களை கடந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் நடந்த அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட ஏதாவது ஒரு குறைபாடு காரணமாக ஜெனிபர் பாம்ப்லோனாவின் இயற்கை அழகு மாறி வித்தியாசமான உருவ அமைப்புக்கு மாறினர். ஒரு கட்டத்தில் தான் அறுவை சிகிச்சைகளுக்கு அடிமையானதை உணர்ந்த அவர் தான் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும் வெளிப்படுத்தினார். எனவே மீண்டும் இயற்கையான தனது தோற்றத்தை பெற விரும்பிய ஜெனிபர் அதற்கான சிகிச்சையில் இறங்கியுள்ளார். மேலும் உருவத்தை மாற்ற செய்ய அறுவை சிகிச்சைகள் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களுடன் பரப்புரை செய்து வருகிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.