உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கடந்த 10-ம் தேதியன்று முதல்வர் யோகி ஆதித்யநாத், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் லூலூ வணிக வளாகத்தை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர், இந்த வணிக வளாகத்தில் வேலை செய்துவந்த முஸ்லிம் ஊழியர்கள் திறந்தவெளியில் நமாஸ் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.
வீடியோ வைரலானதையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அகில பாரதிய இந்து மகாசபா, மால் அருகே ஹனுமான் சாலிசாவை ஓத உள்ளூர் அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது. இது குறித்து இந்து மகாசபா செய்தித் தொடர்பாளர் சிஷிர் சர்துர்வேதி, “ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாலில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே இந்துக்கள் மற்றும் பிற சமூகத்தினரும் பிரார்த்தனை செய்ய மால் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்” எனக் கூறியதாக செய்திகள் வெளியானது.
இந்த விவகாரம் தீவிரமடைந்துவரும் நிலையில், லூலூ வணிக வளாக நிர்வாகம் இன்று, `எந்தவொரு மத வழிபாடும் வளாகத்தில் அனுமதிக்கப்படாது’ என்று அறிவிப்பு பலகை மூலம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில், லுலு மாலில் தொழுகை நடத்தியதாக அடையாளம் தெரியாத நபர்கள்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.