பெருமழையால் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு பெருகும் நீரை கர்நாடக அரசு காவிரியில் திறந்து விடுகிறது. வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமான வீதத்தில் வருகின்ற தண்ணீரால் தமிழகத்தை நோக்கி வெள்ளப்பெருக்குடன் காவிரி ஆறு பாய்ந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் நடப்பு ஆண்டில் தாமதமாக தொடங்கினாலும் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட மிக அதிகமாவே பெய்து வருகிறது. காவிரியின் உற்பத்தி இடமான குடகு மாவட்டத்தில் மட்டுமின்றி, கர்நாடகத்தில் உள்ள காவிரியின் துணை நதிகளான ஹேமாவதி, ஹேரங்கியிலும், கேரளத்தில் உற்பத்தியாகி கர்நாடகத்தில் காவிரியில் கலக்கும் கபினியிலும் மழை தந்த கொடையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அளவு கடந்து வரும் தண்ணீரை, கர்நாடகத்தில் உள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி அணைகளில் மட்டுமின்றி, காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் தேக்கி வைக்க கர்நாடக அரசால் முடியவில்லை. இதனால் வழக்கமாக தமிழகத்திற்கு உரிய தண்ணீரையே தர மறுக்கும் கர்நாடக அரசு, இந்த முறை உபரி நீரை நாள் தோறும் அதிக அளவில் திறந்து விட்டு வருகிறது.
இன்று காலை பத்து மணி அளவில் காவிரியில் வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் விடுவித்த கர்நாடக அரசு அடுத்த ஒரு மணி நேரத்தில் இதனை வினாடிக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கன அடி வீதமாக அதிகரித்தது. ஆனாலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் மதியம் 12 மணி அளவில் வினாடிக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம் கன அடி வீதமாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தண்ணீரால் பொங்கி பெருகிய நிலையில் தமிழகம் நோக்கி பாய்ந்து வருகிறது காவிரி ஆறு. ஒகேனக்கல்லில் பாறைகளையும், அருவிகளையும் மூழ்கடித்து, இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளக் கோலத்தை வெளிப்படுத்துகிறது காவிரி.
இதனால் ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும், ஆற்றங்கரைக்கு செல்லுவும் விதிக்கப்பட்ட தடையை ஆறாவது நாளாக நீடித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஒகேனக்கல்லை கடந்து மேட்டூருக்கு வரும் காவிரி ஆறு, அங்குள்ள அணையை நிரம்பும் வித மாக வெள்ளக்கோலம் பூண்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீத த்திற்கும் அதிகமாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டி உள்ளது. இதே ரீதியில் நீர்வரத்து இருந்தால் அடுத்த மூன்று நாட்களில் அணையின் நீர்மட்டம் உச்சபட்ச நீர்தேக்கும் அளவான 120 அடியை எட்டுமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து இப்போது பாசனத் தேவைகளுக்கான வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்திறப்பை விட வரத்து ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதால், அணை நிரம்பி விரைவில் திறக்கும் நிலை ஏற்படுமென அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு ஏற்ப தமிழகத்தில் காவிரி கரையோர ஊர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கனமழையால் அமராவதி அணை முழு கொள்ளளவான 90 அடியை எட்டியதால், அங்கிருந்து 5000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஆற்றங் கரையோர கிராமங்களில் கால்நடை மேய்ச்சலுக்கோ, மீன்பிடிக்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என வெள்ள அபாயஎச்சரிக்கை விடப்பட்டுள்ளது.