டெக்சாஸை தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான நானோராக்ஸ் உருவாக்கிய, புதிய கழிவுகளை அகற்றும் தொழில்நுட்பத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நாசா வெற்றிகரமாக சோதித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கழிவுகளை அகற்றுவதற்கான மிகவும் திறமையான மாதிரியை சோதனை நிரூபித்தது.
வழக்கமாக, சர்வதேச விண்வெளி வீரர்கள், குப்பைகளை சேகரித்து, சிக்னஸ் கார்கோ வாகனம், நிலையத்திற்கு வரும் வரை, பல மாதங்களுக்கு காத்திருப்பார்கள். சிக்னஸ் என்பது விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ’டிஸ்போஸபிள்’ விண்கலமாகும்.
அதன் முதன்மைப் பணியை முடித்த பிறகு, விண்வெளி வீரர்கள் அதில் சேகரித்து வைத்த குப்பைகளை நிரப்பி விண்கலத்தை வெளியிடுகின்றனர். இதற்குப் பிறகு, அது பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது சுற்றுப்பாதையில் இருந்து விலகி முற்றிலும் எரிகிறது.
நானோபிராக்ஸ் உருவாக்கிய புதிய கான்செப்ட், பிஷப் ஏர்லாக்கில் பொருத்தப்பட்ட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கழிவுக் கொள்கலனைப் பயன்படுத்துகிறது.
குழு உறுப்பினர்கள் அதில் சுமார் 270 கிலோகிராம் கழிவுகள் வரை நிரப்ப முடியும். இதற்குப் பிறகு, கன்டெய்னர் வெளியிடப்படும், மேலும் சிக்னஸ் போலவே, பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது அது முற்றிலும் எரிகிறது. விண்வெளி வீரர்கள் கழிவுகளை அகற்றுவதற்காக சரக்கு விண்கலம் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பதால், இந்த முறை மிகவும் திறமையானது என்பது கருத்து.
வெற்றிகரமான முதல் சோதனையின் போது, கன்டெய்னரில் நுரை, பேக்கிங் பொருட்கள், சரக்கு பரிமாற்ற பைகள், பணியாளர்களின் அழுக்கு ஆடைகள், சுகாதார பொருட்கள் மற்றும் பயன்படுத்திய அலுவலக பொருட்கள் உட்பட சுமார் 78 கிலோகிராம் குப்பைகள் இருந்தன.
“இந்த வெற்றிகரமான சோதனையானது விண்வெளி நிலையங்களுக்கான கழிவுகளை அகற்றுவதற்கான எதிர்காலத்தை நிரூபிப்பது மட்டுமல்லாமல், வணிக ரீதியான LEO (low Earth orbit) இலக்குகளின் அடுத்த கட்டங்களுக்கு நாம் எவ்வாறு தயாராகலாம் என்பதற்கான முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும், வணிக தொழில்நுட்ப சோதனைப் படுக்கையாக, சர்வதேச விண்வெளி நிலையத்தை பயன்படுத்துவதற்கான நமது திறனையும் எடுத்துக்காட்டுகிறது.
NASA மற்றும் ISS திட்டத்திற்கு அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி, மேலும் இந்த ஒத்துழைப்பைத் தொடர நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்று நானோராக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அமேலா வில்சன் நிறுவனத்தின் செய்தி அறிக்கையில் தெரிவித்தார்.
விண்வெளியில் கழிவு சேகரிப்பு பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது, ஆனால் பொதுவில் விவாதிக்கப்படவில்லை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இது பெரிய சவாலாக உள்ளது.
நான்கு விண்வெளி வீரர்கள் வருடத்திற்கு 2,500 கிலோ குப்பைகளை அல்லது வாரத்திற்கு இரண்டு குப்பைத் தொட்டிகளை உருவாக்குகிறார்கள்.
விண்வெளியில் அதிக மக்கள் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் காலத்திற்கு நாம் செல்லும்போது வீட்டில் இருப்பது போல், இது அவசியமான ஒன்று என நானோராக்ஸின் பிஷப் ஏர்லாக் திட்ட மேலாளர் கூப்பர் ரீட் செய்தி அறிக்கையில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“