ஊரையே தன் கைக்குள் வைத்திருக்கும் ரவுடியை எப்படி அடித்து உதைத்துத் திருத்துகிறார் ஹீரோ என்பதுதான் `The Warriorr’ சொல்லும் கதை.
மதுரைக்குப் புதிதாக வருகிறார் அரசு மருத்துவரான ராம் போத்தினேனி. கமர்ஷியல் சினிமாக்களின் ஆதிகால டெம்ப்ளேட்படி அடிதடி, கொலை, ரத்தம் என மதுரையே பீதியில் இருக்கிறது. தூங்காநகரத்தை மேலும் தூங்கவிடாமல் செய்துகொண்டிருப்பவர் ஆதி. ஒவ்வொரு கொலைக்கும் ஒரு மரம் நடுவோம் என மதுரைக்குள் ஒரு காட்டையே (?) உருவாக்கி வைத்திருக்கும் டெரர் ரவுடியான ஆதிக்கு முன் குறுக்க மறுக்க ஓடி மக்களைக் காப்பாற்றுவேன் என வீம்பாக வம்புக்கு நிற்கிறார் டாக்டர் ராம்.
பிறகென்ன பாட்ஷா பாய் ஆட்டோக்கார வேடத்தில் இருக்கும் போது, போட்டுப் பொளப்பார்களே அப்படியானதொரு செட்டப்படி ராமை ஹாங்கரில் மாட்டிவிடுகிறார் ஆதி. யாரும் தண்ணி கொடுக்கக்கூடாது என ஆதி மிரட்ட, மழையே தண்ணீராகக் கொட்டுகிறது. ஊரை விட்டு மாயமாகும் டாக்டர் ராம், எப்படிப் பிறகு போலீஸாக (அட, ஆமாங்க!) அதே ஊருக்குள் வந்து _____________________________________ (நீங்களே யூகித்துக்கொள்ளலாம்.)
டிரிம் தாடி மருத்துவர், முறுக்கு மீசை போலீஸ் என ராமுக்கு இரண்டு கெட்டப். படம் ‘Bilingual’ என்பதால் தமிழ் வெர்ஷனில் ராமுக்கு ‘அறிமுகம்’ என்றே போடுகிறார்கள். ராமின் நடனம், சண்டைக் காட்சிகள் என எல்லாமே பக்கா. ரொமான்ஸ் காட்சிகள்தான் கொஞ்சம் வீக்காக இருக்கிறது.
தமிழில் முதல் முறையாகக் கீர்த்தி ஷெட்டி. இவருக்கும் ‘அறிமுகம்’தான். விசிலடிக்கும் ஆர்ஜே கதாபாத்திரம் என்றாலும், நாயகனைச் சுற்றிச் சுற்றி வரும் அதே பழைய வேடம்தான். அதற்கு மேல் அதில் அவரும் ஒன்றும் நடிக்க முடியாது; நாமும் பெரிதாய் எதிர்பார்க்க முடியாது. ராமின் அம்மாவாக நதியா. ‘KGF’ ராக்கி பாய் தாயாரைப் போலவே மகனுக்கான பன்ச் வசனங்கள் சிலவற்றைக் குத்தகைக்கு எடுத்துத் தானே பேசும் கதாபாத்திரம். சிறப்பாகவே செய்திருக்கிறார். முரட்டு மீசை, தாடி எனக் கொடூர வில்லனாக ஆதி. தன்னைக்கொல்ல வந்தவனைக்கூடக் கூடவே வைத்துச் சுற்றும் அளவுக்குக் கெத்தான ஒரு ரவுடி. இன்னும் கொஞ்சம் ரகளையாக நடித்திருக்கலாம். இவர்கள் போகக் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் நடிகர்கள், கொஞ்சம் தெலுங்கு நடிகர்கள் எனக் கலவையாய் எடுத்திருக்கிறார் லிங்குசாமி.
ஆனால், தமிழில் பக்கா கமர்ஷியல் படங்களைக் கொடுத்த லிங்குசாமி, இதில் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாகத் திரைக்கதையை அமைத்திருக்கலாம். இரண்டு காட்சிகள் தவிர, வேறு எங்குமே நாயகனின் புத்திசாலித்தனம் வெளிப்படவே இல்லை. அடி உதை மட்டுமே படம் நெடுக வருகிறது. பிருந்தா சாரதியின் வசனங்கள் சில இடங்களில் வழக்கம்போலவே சிரிக்க வைக்கின்றன. DSP-யின் இசையில் ஏற்கெனவே ஹிட் அடித்த விசிலும், புல்லட்டும் படத்திலும் சீறிப் பாய்கின்றன. ஆனால், அந்தப் பாடல்கள் படத்தில் வந்து விழும் இடங்கள் பெருங்களத்தூரிலேயே சென்னை என இறக்கிவிடுவது போல, தவறான இடங்களில் சரியாக வருகின்றன.
பைலிங்குவல் சினிமா என்கிற வகையில் இது அடுத்தபடி என்றே சொல்லலாம். முக்கிய கதாபாத்திரங்களின் லிப் சின்க், இடப் பெயரை மாற்றுவது, TAMILNADU SPECIAL POLICE என பேட்ஜ் அணிவது எனப் பல விஷயங்களில் மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால் முழுக்க செட் போடப்பட்ட ஊரை மதுரை என்று நம்பவைக்க முயன்றதுதான் காமெடி.
படத்தின் மிகப்பெரிய பிரச்னை இதில் எந்தளவு மசாலா சேர்ப்பது என்பதுதான். தெளிந்த நீரோடை போல, பெரும்பாலான காட்சிகளை யாராலும் யூகிக்க முடிந்த திரைக்கதையில் தெலுங்கு சினிமா அளவுக்கு மசாலா தூக்கலாகவும் இல்லாமல், தமிழ் சினிமா அளவுக்குச் சாந்தமாகவும் இல்லாமல் மையமாகப் பயணித்திருக்கிறார் லிங்குசாமி. அதனாலேயே மசாலா அளவில் தமிழ், தெலுங்கு பார்டர் ஏரியாவாக ஒதுங்கிவிடுகிறது இந்தத் திரைப்படம். டாக்டராக இருந்து போலீஸாக மாறுவதில் லாஜிக் இல்லையே என்று நாம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே எண்டு கார்டில் அப்படி நிஜமாகவே போலீஸாக மாறியவர்களைக் காட்டுகிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால், அத்தகைய மாற்றத்தை, கதையில் இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையுடன் அணுகியிருக்கலாம்.
கமர்ஷியல் சினிமாக்களுக்கான திரைக்கதைகள் மாறிவிட்டன என்பதை இயக்குநர்கள் புரிந்துகொண்டால் நலம் என்பதை உணர வைக்கிறது இந்த `தி வாரியர்.’