சென்னை: அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி இபிஎஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கடந்த 11-ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதையடுத்து, கட்சி அலுவலகத்துக்கு கோட்டாட்சியர் சீல் வைத்தார். இந்த சீலை அகற்றக் கோரி, பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அதிமுக அலுவலகம் முன்பு நடந்த சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி வீடியோ ஆதாரங்களை போலீஸார் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, இதுதொடர்பான சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் சாய் வர்தினி, ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோரது அறிக்கைகளை தாக்கல் செய்தார்.
அப்போது நீதிபதி, ‘‘அதிமுக அலுவலகத்துக்கு எந்த அடிப்படையில் சீல் வைக்கப்பட்டது? போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராஜ்திலக், ‘‘சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதால்தான் சீல் வைக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு சுமுகத் தீர்வுகாணும் வரை சீலை அகற்ற உத்தரவிடக் கூடாது. இந்த சம்பவம் தொடர்பாக 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொது சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பீட்டை வசூலிக்கவும், எஞ்சியவர்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘அங்கு என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களே சாட்சி. கட்சி அலுவலகம் ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமானது என்றால், கதவை உடைத்து கோப்புகளை அள்ளிச் சென்றது ஏன்? ’’ என்றார்.
அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஏ.ரமேஷ், பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆகியோர், ‘‘எந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றபோதும், அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை யாரும் பூட்டியது இல்லை.
ஆனால், அன்று பழனிசாமியின் ஆதரவாளர்களான 4 மாவட்டச் செயலாளர்கள், தங்களது கோஷ்டியினருடன் வெளியே அமர்ந்துகொண்டு, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை உள்ளே செல்லவிடாமல் தடுத்து, கதவுகளைப் பூட்டியதால்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே உள்ள இந்தப் பிரச்சினைக்கு சிவில் நீதிமன்றம் மூலமாகவே தீர்வுகாண முடியும் என்பதால், அதுவரை அலுவலகத்தை மூடியே வைத்திருக்கலாம். இந்த வழக்கில் போலீஸாரின் அறிக்கைக்கு பதில் மனு தாக்கல்செய்ய அவகாசம் தேவை’’ என வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார். மேலும், இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.