நாட்டில் அமைதியை நிலைநாட்ட சிறப்பு குழு ஒன்றை நியமித்து உள்ளதாக இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என, அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அதன்பிறகும் அங்கு பிரச்னைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.
மூன்று நாட்களுக்கு முன்பு அதிபர் மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு தப்பியோடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். இதனிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரணில் விக்ரமசிங்கேவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கையின் அடுத்த அதிபர் யார்? ஐந்து முனைப் போட்டி!
தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்கே, மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க, 19வது அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக தெரிவித்தார். போராடும் உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும், ஆனால் வன்முறையை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அமைதியை நிலைநாட்ட, பாதுகாப்பு பதவிநிலை தலைமை அதிகாரி, காவல் துறை தலைவர், முப்படை தளபதிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுவை நியமித்து உள்ளதாகவும், வன்முறையாளர்களுக்கு எதிராக அரசியல் தலையீடு இன்றி நடவடிக்கை எடுக்க முழு அதிகாரமும் அக்குழுவுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.