நீட் தேர்வு பயத்தால் அரியலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர் அப்பா, அம்மா, தம்பி மூவருக்கும் தனித்தனியே கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
அரியலூர் மாவட்டம், ரயில்வே காலனி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவர், வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மனைவி உமாராணி. இவரின் மகள் நிஷாந்தி. இவர் 2020-21ம் கல்வி ஆண்டு பொதுத் தேர்வில் 529 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
சிறு வயது முதலே டாக்டர் ஆகவேண்டும் என்கிற ஆசையால் கடந்த வருடம் நீட் தேர்வு எழுதிய நிலையில் அதில் தோல்வி அடைந்திருக்கிறார். இதனையடுத்து, இந்த வருடமும் நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்து தன்னை தயார்ப்படுத்தி வந்திருக்கிறார்.
இந்நிலையில், நீட் தேர்வு எழுத உள்ள நிலையில் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவி பெற்றோர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீஸாரின் விசாரணையில் மாணவி கைப்பட எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினர். கடிதத்தில் தனது பெற்றோர்கள் மற்றும் தம்பிக்கு உருக்கமாக எழுதிய கடிதத்தை போலீஸார் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வாசித்துக் காட்டிய பின்பு போலீஸார் அக்கடிதத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
மாணவி எழுதிய கடிதத்தைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு முன்பாக மாணவியின் செல்போன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ‘மிஸ்ஸிங் யூ டேடி’ என ஸ்டேடஸ் வைத்திருக்கிறார். அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் இதுவரை 4 மாணாக்கர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடப்பட்டது.