அழியாத உடல்… தொல்லுயிர் படிமங்கள் இப்படித்தான் உருவாகின்றன ரகசியம் பகிரும் பேராசிரியர்!

உடலை இயக்கும் சக்தியை உயிர், ஆன்மா என்று அழைக்கிறோம். உயிரற்ற உடல் அழிந்து விடுகிறது. ஆனால் அந்த ஆன்மா அழிவற்றது என ஆன்மீகம் நம்புகிறது. கண்ணுக்குப் புலப்படாத ஆன்மாவுக்கு அழிவில்லை என்பது உண்மையோ இல்லையோ? ஆனால் உடலின் உருவத்திற்கு அழிவில்லா நிலை உண்டு என அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் தெளிவாக புரியவைக்கிறது.

ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி அவர்கள் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்தார். அந்த வேலையில் எங்கள் துணைவேந்தர் பேராசிரியர் பிச்சுமணி என்னிடமிருந்தத் தொல்லுயிர்படிமங்களை ஆளுநருக்குக் காட்சி படுத்த வாய்ப்பளித்தார்.

நத்தையின் தொல்லுயிர்படிமம் | சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது

நானும் அவ்வாறே செய்தேன். அதன் பின்னர் இரண்டு நாட்களுக்குத் தொல்லுயிர் படிமங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் பார்வைக்கும் வைக்கப்பட்டது.

அப்போது ஒரு மாணவி ஒரு நத்தையின் தொல்லுயிர் படிமத்தைக் கையில் எடுத்தாள். இது நத்தையா அல்லது கல்லா எனக் கேட்டாள். அவளுக்கு நம்ப முடியவில்லை நத்தை மாதிரி கல்லில் செய்தீர்களா என்று கேட்டாள்! எனக்கு வியப்பாக இருந்தது.

நான் சிரித்தவாறே “இல்லை யாரும் இதைச் செய்யவில்லை; இயற்கையாகவே இவை கிடைக்கின்றன என்றேன்.”

இது சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிர் வாழ்ந்த நத்தையின் உடல் என்றேன். பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரிகளின் உடல் கல்லாய் மாறிய நிலையில் கிடைக்கின்றன. இதனை தொல்லுயிர் படிமங்கள் (fossils) என அழைக்கின்றனர், என்றேன்.

`நத்தை மட்டும்தானா?’ எனக்கேட்டாள்.

நத்தைகள் மட்டும் அல்ல எண்ணிலடங்கா உயிரிகளின் உடல் கல்லாய் மாறிய நிலையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கிடைக்கிறது என்றேன்.

தொல்லுயிர் படிமங்கள்

அவள் அது எப்படிக் கல்லாக மாறியது எனக் கேட்டாள்.

அவளுக்கு பதிலைக் கூறினேன்..

இது ஒரு இயற்கை அதிசயம் தான். ஒரு நத்தை நீர்நிலைகளில் இருக்கிறது என எண்ணிக் கொள்ளுங்கள். அதன் வாழ்வு இயற்கையாகவோ அல்லது ஒரு பேரிடராலோ இறந்ததாக வைத்துக் கொள்ளுங்கள். இறப்புக்குப் பின் நத்தையின் உடலில் இருக்கும் மெல்லிய திசுக்கள் அழுக ஆரம்பிக்கும். பின் அவை முற்றிலும் அழிந்துவிடும். நத்தையின் வலிமையான ஓடு மட்டும் அப்படியே கிடக்கும். பின் சில காலத்தில் நத்தையின் ஓட்டுக்குள் மண் மற்றும் சகதி புகுந்து கொள்ளும். பின்னர் வெயில் காலத்தில் நத்தையின் வெளி ஓடும் உள்ளேயுள்ள சகதியும் நன்றாக காய ஆரம்பிக்கும்.

நத்தையின் வெளி ஓடு சுண்ணாம்பால் ஆனது. வெயிலில் நன்கு காய்ந்து ஓட்டின் வெளிப்புறத்தில் சுண்ணாம்பு மாவு நிலையை அடைகிறது. பின்னர் வரும் மழைக்காலத்தில் இவை தண்ணீரில் நனையும் போது சுண்ணாம்பு பசை உருவாகிறது. இந்த சுண்ணாம்பு பசையை நத்தையின் உள்ளே இருக்கும் சகதி உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. இது ஒரு வருடத்தில் நடக்கிற செயல் அல்ல. பல கோடி வருடங்களாக நத்தையின் ஓட்டிலுள்ள சுண்ணாம்பு உள்ளே இருக்கும் சகதியால் உறிஞ்சப்படுகிறது. இந்த சகதி படிப்படியாக வலுவடைகிறது. அதே நேரத்தில் நத்தையின் ஓடு படிப்படியாக வலுவிழக்கிறது. இந்த செயலால் நத்தையின் உருவம் மாறாமல் வலிமையான தொல்லுயிர்ப் படிமங்களாக உருவெடுக்கிறது.

நத்தைகள் மட்டும் அல்ல. பல ஆயிரக்கணக்கான வகை வகையான உயிரிகள் தொல்லுயிர் படிமங்களாகக் கிடைக்கின்றன

தொல்லுயிர் படிமங்கள்

தொல்லுயிர் படிமங்கள் உருவாகும் இந்த நிகழ்வைக் கிராமத்து மக்களின் பழக்கத்துடன் இப்படி ஒப்பிடலாம். கடலோர மற்றும் ஆற்றோர கிராமங்களில் மக்கள் இறந்த நத்தை மற்றும் சிப்பிகளின் ஓடுகளைச் சேகரிப்பார்கள். பின்னர் இவற்றைக் கரித்துண்டுகளுடன் கலந்து தீயில் வேக வைப்பார்கள். பின்னர் வெந்த நத்தை மற்றும் சிப்பிகளின் ஓடுகளில் சிறிது தண்ணீர் தெளிப்பார்கள். உடனே அங்குத் தண்ணீர் மளமளவெனக் கொதிக்க ஆரம்பிக்கும். ஆறியபின் அங்கே பயன்பாட்டுக்குத் தகுந்த சுண்ணாம்பு தயாராகிவிடும்.

பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்

இதோடு மணல் மற்றும் சில பொருட்கள் சேர்த்துக் கலந்து சுவரில் பூசுவார்கள். இந்த கலவை சிமெண்ட் மாதிரி நன்கு இறுகி வலிமையாகிவிடும். சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன் இந்த முறையில் கட்டப்பட்டதுதான் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலாகும். அந்த கோயிலில் சுண்ணாம்பில் செய்த சிலைகள் வலுவான கற்சிலைகளாக இன்றும் காட்சிஅளிக்கிறது!

தொல்லுயிர் படிமங்கள் உருவாகப் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகும். தொல்லுயிர் படிமங்கள் உருவாகுவதற்கும் மக்கள் சுண்ணாம்பு சிலை செய்வதற்கும் உள்ள வித்தியாசம் இவ்வளவுதான்!! அந்த மாணவிக்கு அவ்வளவு சந்தோஷம். குழந்தையாக மாறி மகிழ்ந்தாள். அப்படியானால் தொல்லுயிர் படிமங்கள் என்றால் ஒரு காலத்தில் வாழ்ந்த உயிரினங்களின் சிலைகள் எனச் சொல்லலாமா எனக் கேட்டாள். அப்படியும் சொல்லலாம் என்றேன்.

தொல்லுயிர் படிமங்கள் பற்றி இன்னும் பார்ப்போம்..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.