கவுகாத்தி: வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசமும், அசாம் மாநிலமும் 804 கிமீ துார எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. கடந்த 1972ம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் யூனியன் பிரதேசமானது. அப்போது, பழங்குடியினருக்கு சொந்தமான பாரம்பரிய நிலங்கள் ஒருதலைப்பட்சமாக அசாமுக்கு மாற்றப்பட்டது. பின்னர், 1987ம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் மாநில அந்தஸ்தை பெற்றதும் அமைக்கப்பட்ட முத்தரப்பு கமிட்டி அசாமின் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள் அருணாச்சல பிரதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா , அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா காண்டு இருவரும் நேற்று சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி, பிரச்னைக்குரிய கிராமங்களின் எண்ணிக்கை 123 ல் இருந்து 86 ஆக குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்கப்படும் என்று ஹிமந்தா தெரிவித்தார்.