உக்ரைன் மீதான போரால் உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்த பொருளாதராத் தடைகளுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு பழி வாங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார் விளாடிமிர் புடின்.
ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 384 பேர்களுக்கு ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் இது தொடர்பில் உறுதி செய்துள்ளதுடன், ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் தங்கள் உத்தியோகப்பூர்வ இணைய பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.
மேலும், உக்ரேனில் முன்னெடுக்கப்படும் சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்துவதன் மூலம் நட்பற்ற, ரஷ்ய-விரோத நிலைப்பாட்டை ஜப்பான் எடுத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பின்னர் ஜப்பான் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
ரஷ்யாவின் மத்திய வங்கி சொத்துக்களை முடக்குவதில் G7 நாடுகளுடன் ஜப்பான் இணைந்து செயல்பட்டது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த நாள் முதலே ஜப்பான் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தது.
மேலும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது உக்ரேனிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாத மீறல் என்று ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜூலை 1ம் திகதி சகலின்-2 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டத்தில் ஜப்பானின் பங்குகளை சகாலின் மீது மாற்றும் ஆணையை ரஷ்யா வெளியிட்டது.
சகலின்-2 திட்டத்தின்படி பெருமளவு திராவக இயற்கை எரிவாயு ஜப்பானுக்கு இன்றளவும் அளிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே ரஷ்யாவால் மாற்றப்பட்ட பங்குகளை மீண்டும் கைப்பற்றும் எண்ணம் இருப்பதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.
அந்த திட்டத்தில் இணைத்துக்கொள்வது ஜப்பானின் தேவை எனவும், எதிர்காலத்தில் பேருதவியாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜப்பானின் திராவக இயற்கை எரிவாயு இறக்குமதியில் ஏறத்தாழ 8 சதவீதம் இதுவரை ரஷ்யாவிலிருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.