சென்னை: ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைப் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் (சிஐடியு) போஸ்டர் இயக்கம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உட்பட அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் பே மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் கழக ஊழியர்களுக்கு மட்டும் பே மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதியம் வழங்க மறுக்கப்படுகிறது.
போக்குவரத்துக் கழகங்களில் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ஓய்வு பெறும் ஊழியர்களை எந்தவித பணப் பலன்களும் வழங்காமல் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்புகின்றனர். ஓய்வு பெற்றவர்களுக்கு 80 மாதங்களுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது.
பேருந்து இயக்கத்துக்கே சிக்கலாக சுமார் 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதிமுக ஆட்சியிலும் இது போன்ற சூழல்தான் நிலவியது. திமுக ஆட்சியிலாவது ஏதேனும் மாற்றம் நிகழும் எனக் காத்திருந்தோம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத நிலையே தொடர்கிறது.
முதல்வர் தலையிட்டு இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்
பட்ட பணிமனைகளில் போஸ்டர் மூலம் கோரிக்கை வைக்கிறோம். அடுத்த கட்ட ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு முன்பாவது அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். நியாயமான கோரிக்கை மறுக்கப்
பட்டால் போராட்டத்துக்கும் தயாராகவும் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.